×

கற்போம் எழுதுவோம் இயக்கத்தை நடைமுறைப்படுத்துதல் கலந்தாய்வு கூட்டம்

பெரம்பலூர், அக். 30: பெரம்பலூர் மாவட்டத்தில் புதிய வயது வந்தோர் கல்வி திட்டத்தின்கீழ் கற்போம் எழுதுவோம் இயக்கத்தை நடைமுறைப்படுத்துதல் குறித்து 4 ஒன்றியங்களை சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளை சேர்ந்த 319 தலைமை ஆசிரியர்களுக்கு 2ம் கட்டமாக மாவட்ட அளவிலான கலந்தாய்வு கூட்டம் புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் துறையூர் சாலையில் உள்ள மாவட்ட சாரணர் இயக்க கூட்டரங்கில் நடந்தது.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதிவாணன் தலைமை வகித்து திட்டத்தின் நோக்கம், முக்கியத்துவம், தன்னார்வலர்களை தேர்வு செய்யும் விதம், திட்டத்தில் அனைவரது பங்கு மற்றும் திட்டத்தை முழுமனதோடு நடைமுறைபடுத்துவது போன்ற தகவல்களை எடுத்துரைத்தார்.  மேலும் 15 வயதுக்கு மேற்பட்ட, முற்றிலும் எழுதவும் படிக்கவும் தெரியாத, நிர்ணயிக்கப்பட்ட இலக்கான கல்லாதோர் 3,154 நபர்களை வீடுவீடாக சென்றும், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்களில் ஏற்கனவே பராமரிக்கப்படும் குடும்ப விவரங்கள், 100 நாள் வேலை திட்ட பயனாளிகளின் பதிவேடு, சுய உதவி குழுக்கள் சார்ந்த பதிவேடுகள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு கல்லாதோர்களை இனம்கண்டு அவர்களுக்கென பள்ளிவாரியாக 20 பயனாளிகளை உள்ளடக்கிய மையங்களை உருவாக்கி தன்னார்வலர்களை கொண்டு பயிற்சி வழங்குவது போன்ற தகவல்களை தெரிவித்தார்.

இதைதொடர்ந்து மாவட்ட அளவில் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக மகாதேவன், ஒன்றிய அளவில் பெரம்பலூர் ஒன்றிய மேற்பார்வையாளராக தேவகி, வேப்பந்தட்டை ஒன்றியத்துக்கென ஆசிரியர் பயிற்றுனர் ராஜேஸ்வரன், வேப்பூர் ஒன்றியத்துக்கென ஆசிரியர் பயிற்றுனர் ராஜேந்திரன், ஆலத்தூர் ஒன்றியத்துக்கென மேற்பார்வையாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் இத்திட்டத்திற்கான செயல்பாடுகளை கண்காணிக்கும் தன்னார்வலர்களாக பொறுப்பேற்றனர். கூட்டத்தில் பெரம்பலூர் மற்றும் வேப்பூர் மாவட்ட கல்வி அலுவலர்கள் மாரி மீனாள், குழந்தைராஜ், மாவட்ட புள்ளியியல் அலுவலர் பால்பாண்டி மற்றும் பலர் பங்கேற்றனர்.

Tags : Writing Movement Implementation Seminar ,
× RELATED புதா.பழூர் அருகே அரசு அனுமதியின்றி மதுவிற்ற 2 பேர் கைது