×

விவசாயிகள் போராட்டம் எதிரொலி ஐ.டி.பி.எல்.க்கு நிலம் கையகப்படுத்தும் பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு

காங்கயம், அக். 30:கோவை மாவட்டம் இருகூரிலிருந்து திருப்பூர், ஈரோடு, சேலம் மாவட்டம் வழியாக கர்நாடக மாநிலம் தேவனகந்தி வரை  பாரத் பெட்ரோலியம் நிறுவனம் சார்பில் குழாய் அமைத்து பெட்ரோல், டீசல் கொண்டு செல்லும் (ஐ.டி.பி.எல்) திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். இந்த நிலையில் இது குறித்து ஆட்சேபனை இருந்தால், காங்கயம் வட்டாச்சியர் அலுவலகத்தில் வரும் நவம்பர் மாதம் 3,4,6ம்  தேதிகளில் நிலம் கையகப்படுத்துவதற்கான விசாரணை (பேச்சுவார்த்தை) அழைப்பாணை படியூர், சிவன்மலை, மரவபாளையம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

இதையடுத்து, நிலயம் கையகப்படுத்தும் பேச்சுவார்த்தைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில்  காங்கயம் வட்டாட்சியர் அலுவலத்தில் மேற்கண்ட தேதிகளில் நடைபெற இருந்த நேரடி பேச்சுவார்த்தை திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மறு விசாரணை நடைபெறும் தேதி பின்னர் தெரிவிக்கப்படும் என வட்டாட்சியர் அலுவலக அறிவிப்பு பலகையில் நோட்டீஸ் ஒட்டி தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் போராட்டம் நடத்தப்போவதாக கூறியதன் எதிரொலி காரணமாக வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற இருந்த பேச்சுவார்த்தை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags : land acquisition talks ,IDPL ,
× RELATED நந்தம்பாக்கம் ஐடிபிஎல் வளாகத்தில் 19 குடியிருப்புகள் இடிப்பு