×

மக்கள் கூட்டம், வாகன நெரிசல் இன்றி நாளையுடன் இரண்டாம் சீசன் நிறைவு

ஊட்டி, அக். 30: கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின் சுற்றுலா பயணிகள் வர அனுமதித்த போதிலும் இரண்டாம் சீசன் மக்கள் கூட்டமின்றி, வாகன நெரிசல் இன்றி நாளையோடு நிறைவடைகிறது. ஊட்டியில் கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் முதல் சீசனும். செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் இரண்டாம் சீசனும்  கடைபிடிக்கப்படுகிறது. இவ்விரு மாதங்களிலும் உள்ளூர் மட்டுமின்றி, வெளிமாநில மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகளவு வருவார்கள்.
 பொதுவாக முதல் மற்றும் இரண்டாம் சீசனின்போது, வார விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும்.
அதேபோன்று அனைத்து சாலைகளிலும், குறிப்பாக சுற்றுலா தலங்களுக்கு செல்லும் சாலைகளில் வாகன நெரிசல் அதிகமாக காணப்படும். கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின் கடந்த இரு மாதங்களில் ஆயுத பூைஜ விடுமுறை உள்ளிட்ட சில பண்டிகை விடுமுறைகள், அரசு விடுமுறை மற்றும் வார விடுமுறை என தொடர் விடுமுறைகள் வந்தன. எனினும், குறைந்தளவே சுற்றுலா பயணிகள் வர அனுமதிக்கப்பட்டதால், சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

ஆயுத பூஜை தினத்தின்று மட்டுமே ஆயிரம் பேர் வந்தனர். மற்ற நாட்களில் மிகவும் குறைந்த அளவிலான சுற்றுலா பயணிகளே வந்தனர். இரண்டாம் சீசனும் இம்முறை எவ்வித ஆர்ப்பாட்டம், மக்கள் கூட்டம் மற்றும் வாகன நெரிசல் இன்றி நாளையுடன் நிறைவடைகிறது. எனினும், தாவரவியல் பூங்காவில், வழக்கம்போல் இம்முறையும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு 7 ஆயிரம் தொட்டிகளை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. இந்த மலர் அலங்காரங்கள் ஓரிரு நாட்களுக்கு வைக்க பூங்கா நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தீபாவளி பண்டிகை விடுமுறைக்கு பின்  முதல் சீசனுக்காக பூங்காவை தயார் செய்ய பூங்கா நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

Tags : Crowd ,season ,
× RELATED கோக் ஸ்டுடியோ தமிழ் சீசன் 2-ன் புதிய பாடல் “தமிழ் வாழ்த்து” வெளியீடு