×

அரசு பள்ளியில் மாணவரிடம் ரூ.5 ஆயிரம் கேட்ட விவகாரம் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் கல்வித்துறை இயக்குனருக்கு நோட்டீஸ்

கோைவ, அக். 30: கோவை தொண்டாமுத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 மாணவர் சேர்க்கைக்கு தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவரிடம் தலைமை ஆசிரியர் ரூ.5 ஆயிரம் கட்டணம் கேட்ட விவகாரம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இயக்குனருக்கு தேசிய தாழ்த்தப்பட்ேடார் ஆணையம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.
கோவை தொண்டாமுத்தூரில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், பத்தாம் வகுப்பில் ஆங்கில வழியில் படித்து வந்த தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவர் ஒருவர் பிளஸ்-1 ஆங்கில வழியில் சேருவதற்கு பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது, அவரிடம் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் ஆங்கிலம் வழி கல்விக்கு ரூ.5 ஆயிரம் அளிக்க வேண்டும் என வற்புறுத்தியுள்ளார்.

இல்லையென்றால், தமிழ் வழியில் வேண்டுமானால் படித்துக்கொள் கட்டணம் இல்லை என கூறியுள்ளார்.  இதனால், மாணவர் மற்றும் அவரின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். கொரோனாவால் வீட்டில் யாரும் வேலைக்கு போகாமல் கஷ்டப்பட்டு வரும் சூழ்நிலையில், ரூ.5 ஆயிரம் கட்டினால்தான் மாணவர் சேர்க்கை என உதவி தலைமை ஆசிரியர் கூறியது மிகுந்த மன வருத்தத்தை அளிப்பதாக பாதிக்கப்பட்ட மாணவர் தெரிவித்து இருந்தார்.இந்நிலையில், மாணவரிடம் ரூ.5 ஆயிரம் கேட்ட விவகாரம் தொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் கல்வி அதிகாரி மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாவட்ட பட்டியல் இன சமுதாய அமைப்புகளின் கூட்டுக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் நாகேந்திரன், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திற்கு புகார் மனு அளித்தார். இதில், பிளஸ் 1 மாணவரிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சமாக கேட்கபட்டிருப்பது கட்டாய கல்வி உரிமை சட்டத்திற்கு எதிரானது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முறையாக தலைமை ஆசிரியருக்கு அறிவுரை வழங்கவில்லை. மேலும், கண்துடைப்பிற்காக விசாரணை நடத்தியுள்ளார்.

எனவே, இந்த விவகாரத்தில் தேசிய தாழத்தப்பட்ட நல ஆணையம் நேரடியாக விசாரணை மேற்கொண்டு, பள்ளியின் தலைமை ஆசிரியரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும். அவருக்கு துணையாக இருந்த கல்வி அலுவலர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து இருந்தார். இந்த புகாரை அடுத்து, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம், பள்ளிக்கல்வித்துறை இயக்குனருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளித்துள்ளது. இதில், புகார் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 15 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும் எனவும் இல்லையென்றால் ஆணையம் சார்பில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், சம்பவம் தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்தி விரிவான அறிக்கையை தயார் செய்து அளிக்க வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு உத்தரவிட்டுள்ளார்.

Tags : Director of Education ,student ,Underprivileged ,National Commission ,government school ,
× RELATED கோவை கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய...