×

தண்டராம்பட்டு அருகே பயங்கரம் நிலம் விற்ற தகராறில் விவசாயி அடித்துக்கொலை வாலிபர் கைது

தண்டராம்பட்டு, அக்.30: தண்டராம்பட்டு அருகே நிலம் விற்ற தகராறில் விவசாயியை அடித்துக்கொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த தேவனூர் கிராமத்தை சேர்ந்தவர் பாக்கியராஜ்(30). அதே கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை(70). இவருக்கு சொந்தமான 40 சென்ட் நிலம், பாக்கியராஜின் நிலம் அருகே உள்ளது.இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, ஏழுமலை தனது நிலத்தை பாக்கியராஜிக்கு விற்க முடிவு செய்தார். இதைத்தொடர்ந்து, பெங்களூருவில் கூலி வேலை செய்து வரும் ஏழுமலையின் மகன் பிரபு என்பவர், பாக்கியராஜிடம் நிலத்திற்காக முன்பணம் ₹4 லட்சம் வாங்கிக் கொண்டாராம்.

ஆனால், சொன்னபடி நிலத்தை பாக்கியராஜிக்கு எழுதி கொடுக்கவில்ைலயாம். எனவே, சம்பந்தப்பட்ட நிலத்தை தனக்கு எழுதி தர வேண்டும், இல்லையென்றால் கொடுத்த பணத்தை திரும்ப தர வேண்டும் என ஏழுமலையிடம், பாக்கியராஜ் கேட்டு வந்தார். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை இதுதொடர்பாக பாக்கியராஜ், ஏழுமலையிடம் கேட்டதில் மீண்டும் தகராறு ஏற்பட்டது. அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியதில் கைகலப்பாக மாறியது. அப்போது, பாக்கியராஜ் தாக்கியதில் படுகாயம் அடைந்த ஏழுமலை மயங்கி விழுந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பாக்கியராஜ் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.அப்பகுதி மக்கள், மயங்கி கிடந்த ஏழுமலையை மீட்டு காட்டாம் பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்ததும் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், செல்லும் வழியிலேயே ஏழுமலை பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்த தச்சம்பட்டு போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து பாக்கியராஜை நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நிலம் விற்ற தகராறில் முதியவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : death ,Thandarambattu ,land sale dispute ,
× RELATED இன்சுலின், மருத்துவ ஆலோசனை மறுப்பு...