×

மலைவாழ் மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி திடீர் ரத்து அமைச்சர், அதிகாரிகளுக்கு எம்எல்ஏ கடும் எதிர்ப்பு குப்பநத்தம் அணை கட்டுவதற்கு நிலம் வழங்கிய

செங்கம், அக்.30: செங்கம் அடுத்த குப்பநத்தம் அணை கட்டுவதற்கு நிலம் வழங்கிய மலைவாழ் மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டது. இதற்கு எம்எல்ஏ மு.பெ.கிரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த குப்பநத்தம் அணையானது கடந்த 2010ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இந்த அணைக்காக தங்களது விளைநிலங்களை வழங்கிய மலைவாழ் மக்கள் 105 குடும்பத்தினருக்கு, வீட்டுமனை பட்டா வழங்காமல் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலைக்கழித்து வந்தனர்.இந்நிலையில், நேற்று அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி ஆகியோரது தலைமையில், துரிஞ்சிகுப்பம் கிராமத்தில் வசிக்கும் மலைவாழ் மக்கள் 105 குடும்பத்தினருக்கு வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதையொட்டி, திமுக எம்எல்ஏ மு.பெ.கிரி. ஊராட்சி மன்ற தலைவர் சிவானந்தம் உட்பட மலைவாழ் மக்கள் நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர்.

ஆனால், வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக திடீரென அறிவிக்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக வீட்டுமனை பட்டா கேட்டு போராடி வந்த நிலையில், நிகழ்ச்சிக்கு வந்திருந்த மலைவாழ் மக்கள் மீண்டும் ஏமாற்றம் அடைந்தனர்.இதுகுறித்து, எம்எல்ஏ மு.பெ.கிரி கூறுகையில், `கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருப்பவர்களுக்கு மலைவாழ் மக்கள் மீது சிறிதும் அக்கறை இல்லை. நானும், திமுக தலைமையும் தொடர்ந்து அழுத்தம் கொடுத்த காரணத்தால்தான், பட்டா தருவதற்கு கோப்புகள் தயாரானது. இந்நிலையில், வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் திமுகவை சேர்ந்த எனது பெயர், ஊராட்சி மன்ற தலைவர் பெயர் இதில் இடம்பெற கூடாது என்ற காழ்ப்புணர்ச்சியின் காரணமாக, அதிமுக அமைச்சர் மற்றும் அரசு அதிகாரிகள் நிகழ்ச்சியை கடைசி நேரத்தில் ரத்து செய்து அறிவித்துள்ளனர்' என்றார்.

Tags : Minister ,MLA ,Kuppanatham Dam ,land ,
× RELATED கணேசமூர்த்தி எம்பி மறைவு: ஈஸ்வரன் எம்எல்ஏ இரங்கல்