×

திருவண்ணாமலை பண்ணை பசுமை அங்காடியில் மலிவு விலை வெங்காயம் விற்பனை தொடங்கியது ரேஷன் கடைகளிலும் விற்க பொதுமக்கள் கோரிக்கை

திருவண்ணாமலை, அக்.30: திருவண்ணாமலை பண்ணை பசுமை அங்காடிகளில் மலிவு விலை வெங்காயம் விற்பனை நேற்று தொடங்கியது.கடந்த சில வாரங்களாக வெங்காயம் விலை வெகுவாக உயர்ந்திருக்கிறது. ஒரு கிலோ வெங்காயம் ₹100 முதல் 120 வரை விற்கப்படுகிறது. அதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.எனவே, பண்ணை பசுமை அங்காடிகளில் ஒரு கிலோ வெங்காயம் ₹45 என்ற விலையில் விற்பனை செய்யப்படும் என அரசு அறிவித்தது. அதையொட்டி, பல்வேறு மாவட்டங்களில் விற்பனை நடந்தது. ஆனாலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் விற்பனை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.இதுகுறித்து, தினகரன் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக, பண்ணை பசுமை அங்காடிகளில் வெங்காயம் விற்பனை நேற்று முதல் ெதாடங்கியது. அதன்படி, திருவண்ணாமலை சன்னதி தெருவில் உள்ள பண்ணை பசுமை அங்காடியில், வரிசையில் நின்று பொதுமக்கள் வெங்காயம் வாங்கிச் சென்றனர். ஒரு நபருக்கு ஒரு கிேலா வெங்காயம் மட்டுமே வழங்கப்பட்டது.

அதேபோல், செய்யாறு, ஆரணி ஆகிய இடங்களில் உள்ள பண்ணை பசுமை அங்காடிகளிலும் நேற்று முதல் வெங்காயம் விற்பனை ெதாடங்கியது. திருவண்ணாமலை மாவட்டத்துக்கு, முதற்கட்டமாக 5 டன் வெங்காயம் கொள்முதல் செய்திருப்பதாகவும், தேவைக்கு தகுந்தபடி கொள்முதல் செய்யப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.வெங்காயம் விலை ஏற்றத்தால், மாவட்டம் முழுவதும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, கிராமப்புற மக்களுக்கு வெங்காயம் எட்டாக்கனியாக மாறிவிட்டது. ஆனால், மாவட்டம் முழுவதும் 3 பசுமை அங்காடிகளில் மட்டும் மலிவு விலை வெங்காயம் விற்பனை செய்வது, அரசின் கண்துடைப்பு முயற்சியாகவே இருக்கிறது என பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.எனவே, வெங்காயம் விலை மீண்டும் சீரடையும் வரை, அனைத்து ரேஷன் கடைகளிலும் மலிவு விலையில் விற்பனை செய்தால் மட்டுமே அனைத்து தரப்பு மக்களும் பயன்பெற முடியும் என எதிர்பார்க்கின்றனர்.

Tags : Thiruvannamalai Farm Green Store ,ration shops ,
× RELATED ரேஷன் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு