×

மேம்பாட்டு நிதி திட்டத்தில் வேளாண்மை தொடர்பான தொழில்களுக்கு கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

திருவள்ளூர்: மத்திய அரசு வேளாண்மை உட்கட்டமைப்பில் வேலைவாய்ப்பினை உருவாக்கி விவசாயிகளும் மற்றும் பொருளாதார முன்னேற்றம் அளிக்கும் பொருட்டு வேளாண்மை விவசாயம் சார்ந்த உட்கட்டமைப்பு நிதி திட்டம் என்ற திட்டத்தினை அறிவித்து 2020-21-ம் வருடத்திற்கு இலக்காக 350 கோடி தமிழ்நாட்டிற்கும், 15 கோடி திருவள்ளுர் மாவட்டத்திற்கும் ஒதுக்கீடு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.  இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகள், முதன்மை விவசாய கடன் கூட்டுறவு நிறுவனங்கள், விவசாய உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விவசாய தொழில் முனைவோர்கள் சமூக விவசாய சொத்துக்களையும் அறுவடைக்கு பிந்தைய விவசாய உட்கட்டமைப்பையும் வலுப்படுத்த முடியும்.   

இத்திட்டத்தின் கீழ் 2 கோடி வரையிலான கடன்களுக்கு 3 சதவீதம் வரை வட்டி சலுகையுடன் 7 ஆண்டு கால அளவில் வழங்கப்படும். வேளாண்மை சார்ந்த துறையில் போதுமான அனுபவம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். மொத்த பயளாளிகளில் தாழ்த்தப்பட்டோருக்கு 16 சதவிகிதமும், பழங்குடியினருக்கு 8 சதவிகிதமும் ஆக மொத்தம் 24 சதவிகிதம் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு வழங்கப்படும். விவசாய பொருட்கள் விற்பனை தொடர்பான மின்னணு வர்த்தகங்கள், சேமிப்பு கிடங்குகள், பழங்களை பதப்படுத்தி வைக்கும் கிடங்குகள், விவசாய போக்குவரத்து தளவாடங்கள், குளிர்பான கிடங்குகள், இயற்கை விவசாயத்துக்கு தேவையான இடு பொருட்கள் உற்பத்தி செய்தல், நுண்ணூட்ட உயிரி உரங்கள் தயாரித்தல் உள்ளிட்ட வேளாண்மை தொடர்பான தொழில்களுக்கு கடனுதவி வழங்கப்படும்.

 கூடுதல் தகவல்களை பெற www.agriinfra.dac.gov.in என்ற இணையதள முகவரியில் அனுகவும். மேலும், விவரங்கள் பெற, பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், சிட்கோ தொழிற்பேட்டை, காக்களுர், தபால் நிலையம் அருகில், திருவள்ளுர் வட்டம் என்ற முகவரியில் நேரிலோ அல்லது 004-27666787 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED மேம்பாட்டு நிதி திட்டத்தில் வேளாண்மை...