×

பண்ணைப் பசுமை காய்கறி அங்காடிகளில் கிலோ ரூ.45க்கு பல்லாரி விற்பனை

தூத்துக்குடி, அக். 29: தூத்துக்குடி பசுமை பண்ணை காய்கறி விற்பனை அங்காடிக்கு மகாராஷ்டிரா  மாநிலத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட 10 டன் பல்லாரி வெங்காயத்தை பணியாளர்கள் தரம் பிரித்து கிலோ ரூ.45 வீதம் விற்பனைக்காக வைத்துள்ளனர்.  இதுகுறித்து, கூட்டுறவு  சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ரவிச்சந்திரன், பண்ணை பசுமை காய்கறி  அங்காடி மேலாண்மை இயக்குநர் அந்தோனிபட்டுராஜ்  கூட்டாக கூறுகையில், ‘‘தமிழகம்  முழுவதும் பண்ணை பசுமை காய்கறி கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.45க்கு  விற்பனை செய்யப்படும் என அமைச்சர்  செல்லூர் ராஜூ உறுதியளித்திருந்தார். அதன்படி மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ள 10 டன் வெங்காயம் தூத்துக்குடி பண்ணைப் பசுமை காய்கறி அங்காடியில் தரம்பிரித்து கிலோ ரூ.45 வீதம் விற்பனை செய்யப்படுகிறது.

 முதற்கட்டமாக மாநகராட்சி பகுதியில் ஸ்பிக் நகர்,  மதுரா கோட்ஸ் உள்பட 15இடங்களில் பண்ணை பசுமை மினி சூப்பர் மார்க்கெட்களில்  குறைந்த விலையில் வெங்காயம், பல்லாரி விற்பனையை துவக்க திட்டமிட்டுள்ளோம். மக்களிடம்  பெறும் வரவேற்பை பொருத்து மாநகர் பகுதிகளில் அதிகப்படியான விற்பனை  மையங்களை திறந்து வெங்காய விற்பனையை தொடங்குவோம்’’ என்றனர்.  இதையடுத்து பண்ணை பசுமை  காய்கறி அங்காடிகளில் குறைந்த விலையில் விற்கப்படும் வெங்காயம், பல்லாரிகளை மக்கள் ஆர்வமுடன் வாங்கி  செல்கின்றனர்.

Tags : Ballari ,stores ,
× RELATED பொருட்கள் வாங்க கடைகளில் குவிந்த மக்கள்