×

சேதமாகி 2 ஆண்டாகியும் சீரமைக்கவில்லை கொத்தமங்கலம் ரேஷன் கடையில் வெளியில் நின்று ெபாருள் வாங்கும் அவலம்

திருத்துறைப்பூண்டி, அக்.29: திருத்துறைப்பூண்டி ஒன்றியம் கொத்தமங்கலாம் ஊராட்சியில்2 பொதுவிநியோக அங்காடிகள் செயல்பட்டு வருகின்றன. இரண்டாயிரத்திற்கும் அதிகமான குடும்ப அட்டைகள் உள்ளது என்பதாலும் , மக்கள் தொகையிலும், பரப்பளவிலும் அதிகமானது என்பதாலும் கடியாச்சேரி மற்றும் ராஜகொத்தமங்கலம் ஆகிய இரண்டு இடங்களில் இரண்டு பொதுவிநியோக அங்காடிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் கொத்தமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே திருத்துறைப்பூண்டி - மன்னர்குடி நெடுஞ்சாலை அருகே செயல்படும் அங்காடியின் கட்டிடம் பழமையானது. போதுமான பராமரிப்பு இல்லாத காரணத்தாலும் கட்டிடம் மிகவும் பழுதடைந்து உள்ளது. மேலும் கஜா புயலின்போது அங்காடியின் முன்புறம் பொதுமக்களுக்காக நிழலுக்காக போடப்பட்டிருந்த பந்தலும் முன்புற கேட்டும் சேதமடைந்தது.

2 வருடங்களுக்கு மேலாகியும் இதுவரை அங்காடி சீர்செய்யப்படாமல் அப்படியே உள்ளது. பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் கொளுத்தும் வெயிலிலும் மழையிலும் நின்றே பொருட்கள் வாங்கி செல்கின்றனர். மேலும் இந்த அங்காடி வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே செயல்படுவதால் . எஞ்சிய நாட்களில் மூடப்பட்டே இருக்கும். அப்படி மூடப்பட்ட அங்காடியின் முன் புறம் தற்போது கேட் இல்லாததால் உட்புறம் ஆடுகளும் மாடுகளும் சென்று படுப்பதுடன் , அங்கே அதன் கழிவுகளையும் போட்டு விடுகின்றன. இதனால் அடுத்த நாள் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் அந்த கழிவுகளை மிதித்தபடியே தான் உள்ளே சென்றுவர வேண்டிய நிலை உள்ளது.

இதுகுறித்து சோழன் நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தின் சார்பில் வட்ட வழங்கு அலுவலகம் , வட்டார வளர்ச்சி அலுவலகம், மன்னார்குடி கோட்டாட்சியர் ஆகியோரிடத்தில் புகார் மனுக்கள் அளிக்கப்பட்டும் எந்த நடவடிக்கை இல்லை.இது குறித்துசமூக ஆர்வலர் சிவகுமார் கூறுகையில், அங்காடியின் எதிரே ஒரு பந்தல் அமைத்துக்கொடுத்தால் பொதுமக்களுக்கு அது பயனுள்ளதாக இருக்கும் . பந்தல் அமைத்து தர அரசு உடனடியாக முன்வரவில்லை என்றாலும் பொதுமக்கள் ஒன்றிணைந்தோ அல்லது சமூக நல அமைப்புக்கள் மூலமாகவோ ஒரு தற்காலிக கீற்று பந்தல் அமைக்க அரசு அனுமதி தரவேண்டும் என்றார். பொதுமக்கள் கூறுகையில்: இந்த அங்காடி அருகில் அரசு அலுவலகங்கள் இருப்பதால் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். எனவே இந்த இடத்தில் ஒரு வேகத்தடை அமைத்துதர வேண்டும் என்றனர்.

Tags :
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ