×

பொதுமக்களுக்கு சுகாதார உணவு கிடைக்க புதிய திட்டம் துவக்கம்

தஞ்சை, அக். 29: தஞ்சை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு சுத்தமான, சுகாதாரமான உணவு கிடைக்க பெற “ஈட் ரைட் சேலஞ்ச்- தஞ்சை மாவட்டம்” என்ற திட்டத்தை கலெக்டர் கோவிந்தராவ் துவக்கி வைத்தார். தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில் வழிகாட்டுதல் குழு கூட்டம் நடந்தது. கலெக்டர் கோவிந்தராவ் தலைமை வகித்து பொதுமக்களுக்கு சுத்தமாகவும், சுகாதாரமாகவும் உணவு தயார் செய்து கிடைக்க உண்டாக்கப்பட்ட “ஈட் ரைட் சேலஞ்ச்- தஞ்சை மாவட்டம்” என்ற திட்டத்தை துவக்கி வைத்தார். பின்னர் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அங்கன்வாடி அமைப்பாளர்களுக்கு சுகாதாரமான முறையில் உணவு தயாரித்து அதை குழந்தைகளுக்கு ஆரோக்கியமாக வழங்குவதற்கு கொடுக்கப்பட்ட பயிற்சி சான்றிதழ்களை கலெக்டர் கோவிந்தராவ் வழங்கினார்.

கூட்டத்தில் கலெக்டர் கோவிந்தராவ் பேசும்போது, தஞ்சை மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தின் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் உரிமை மற்றும் பதிவுகள் அதிகப்படுத்துதல் போன்றவையும், உரிமை பெறாதவர்களுக்கு பிரிவு 63ன்கீழ் குறிப்பாணை வழங்கப்பட்டு வழக்கு தொடுக்கப்படுகிறது. மேலும் பண்டிகை காலம் நெருங்கி வருவதால் அனைத்து வணிக நிறுவனங்கள், உணவு கூடங்கள், பேக்கரி கடைகள் போன்றவைகளில் கொரோனா விதிமுறைகள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டுமென அறிவுறுத்த வேண்டும்.

தஞ்சை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள், உணவு சம்பந்தப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் தரமற்ற உணவு தயாரித்து விநியோகித்தால் அந்நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவற்றை கண்காணிக்க மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றார். கூட்டத்தில் மாவட்ட உணவு நியமன அலுவலர் புஷ்பராஜ், மாவட்ட கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயசந்திரன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜ்குமார் மற்றும் வணிக நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags : Launch ,public ,
× RELATED எம்பி திருநாவுக்கரசர் பேட்டி...