×

அரசு ஊழியர்களாக அறிவிக்க கோரி அங்கன்வாடி ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, அக்.29: புதுக்கோட்டையில் அங்கன்வாடி ஊழியர்களை அரசுஊழியர்களாக அறிவிக்க கோரி அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் பெருந்திரள்முறையீடு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அங்கன்வாடி ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வலியுறுத்தி புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் முன்பாக அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட இணைச்செயலாளர் பத்மா தலைமை வகித்தார். ஒன்றிய நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத் தலைவர் செல்வம் துவக்க உரையாற்றினார்.

அங்கன்வாடி ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவித்து குறைந்தபட்சம் மாதம் ரூ.24 ஆயிரம், உதவியாளர்களுக்கு ரூ.18 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியமாக அங்கன்வாடி ஊழியர்களுக்கு ரூ.9 ஆயிரம், உதவியாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். 10 வருடம் பணிமுடித்த ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். அரசின் காலிப்பணியிடங்களில் இளநிலை உதவியாளர்களாக நியமித்திட வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். வாரிசுதாரர்களுக்க பணி வழங்க வேண்டும். பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொண்டதைப் போல மே மாதம் கோடை விடுமுறையும், பிரசவ விடுப்பாக 9 மாதங்களும் வழங்க வேண்டும். கொரோனா பணியில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட முழக்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்டன.

Tags : Demonstration ,Anganwadi Workers Union ,government employees ,
× RELATED ஓய்வு அரசு ஊழியர் சங்க கூட்டம்