×

நாகை மாவட்டத்தில் சாராயம் கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

நாகை,அக்.29: நாகை மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள எஸ்பிக்கு சவால் விடும் வகையில் இரண்டு சக்கர வாகனங்களில் சாராயம் கடத்துவோர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
நாகை மாவட்டம் என்றால் பாண்டிச்சேரி மாநில மதுபானம் கடத்தலுக்கு பெயர் பெற்றது என்று கூறுவார்கள். அந்த வகையில் பாண்டிச்சேரி மாநிலத்தில் இருந்து நாகைக்கு சாராயம் கடத்துவோர்களை பிடிக்க முடியாமல் நாகை மாவட்ட போலீசார் திணறி வருகின்றனர். நாகை மாவட்டத்தில் எஸ்பியாக இருந்த ராஜசேகரன் சாராயம் கடத்துவோர்களை பிடிப்பதற்கு என்று தனிப்படை அமைத்து இருந்தார். இந்த படையினர் எந்த நேரமும் திடீரென ஆய்வுகள் நடத்தி சாராயம் கடத்தலை ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தது. அவர் பணியிட மாற்றம் ஆகி சென்ற பின்னர் நாகை வந்த எஸ்பி செல்வநாகரத்தினம் தனிப்படை தேவையில்லை என்று கலைத்து விட்டார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாண்டிச்சேரி மாநிலத்திலும் மதுபானங்கள் விலை உயர்வு அடைந்தது. இதனால் அங்கிருந்து நாகை மாவட்டத்திற்கு மதுபானம் கடத்தல் குறைந்தது. ஆனால் சாராயம் கடத்தல் நீடித்து கொண்டே இருந்தது. மதுவிலக்கு போலீசார் அவ்வப்பொழுது பெயரளவிற்கு வழக்குகள் பதிவு செய்து வந்தனர். மேலும் கணக்கு காட்ட வேண்டும் என்பதற்காக ஒரு சில நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வந்தனர். சில நேரங்களில் சாராயம் கடத்துவோர்கள் போலீசார் சோதனை மேற்கொள்வதை பார்த்தவுடன் தப்பியோடி விட்டனர் என்று கூறி சாராயத்தை மட்டும் கைப்பற்றியதாக கணக்கு காட்டிவிடுவார்கள். இதனால் நாகை மாவட்டத்தில் சாராயம் கடத்தல் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியது.

பாண்டிச்சேரியில் இருந்து அதிகாலை நேரங்களில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக இரண்டு சக்கர வாகனங்களில் சாராயம் கடத்துவது தொடர் கதையாக உள்ளது. இரண்டு சக்கர வாகனங்களில் முன்புறம் சாராய மூட்டைகளை வைத்துக்கொண்டு தங்களது உயிரை பற்றி கவலைப்படாமல் அதிவேகத்தில் செல்கின்றனர். இதனால் எதிரே வருபவர்கள் விபத்துக்குள்ளாகிவிடுகின்றனர். நாகை மாவட்டத்திற்கு புதிதாக பொறுப்பேற்ற எஸ்பி, சாராயம் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுப்பார் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்தனர்.

ஆனால் அது நனவாக மாறாமல் கனவாகவே போய்விடும் போல் இருக்கிறது. அருகில் உள்ள மாநிலத்தில் இருந்து சாராயம் கடத்துவோர்களை தடுக்க சிறப்பு படைகளை நியமிக்க வேண்டும். அதே நேரத்தில் இந்த சிறப்பு படையினர் சாராயம் கடத்துவோர்களின் கைகூலியாகவும் மாறிவிடக்கூடாது. இதற்கு எந்த நேரமும் அதிரடியாக ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். சாராயம் கடத்துவோர்களை பிடிக்க செல்லும் தனிப்படை போலீசார் உயிருக்கும் ஆபத்து ஏற்படாமல் திட்டங்களை வகுத்து செயல்பட வேண்டும் என்று நாகை மாவட்ட பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : liquor smugglers ,district ,Naga ,
× RELATED காரைக்காலில் இருந்து நாகைக்கு சொகுசு...