×

யானைகள் வழித்தடம் தொடர்பாக உச்சநீதிமன்றம் அமைத்த குழுவின் தலைவர் மசினகுடியில் ஆய்வு

ஊட்டி,  அக். 29: மசினகுடி பகுதியில் யானை வழித்தடத்தில் உள்ள கட்டிடங்கள் மற்றும்  அலுவலகம் அமைப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் அமைத்துள்ள குழு தலைவர் ஓய்வு  பெற்ற நீதிபதி முதுமலை மற்றும் மசினகுடி பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். ஊட்டி  அருகேயுள்ள மசினகுடி, பொக்காபுரம், வாழைத் தோட்டம், சிங்காரா, மாயார்  போன்ற பகுதிகள் முதுமலை புலிகள் காப்பத்தின் கட்டுப்பாட்டிற்குள் உள்ளது. இது யானைகளின் முக்கிய வழித்தடமாக உள்ளது. முதுமலையில் இருந்து  சத்தியமங்கலம் புலிகர் காப்பகம் வரை இந்த காடுகளில் பல இடங்கள் யானை  வழித்தடங்களாக உள்ளன.  

இங்கு குடியிருப்புகள் மற்றும் விவசாய  நிலங்களும் அதிகளவு உள்ளன. இவைகளில் பெரும்பாலான காட்டேஜ்கள் மற்றும்  ரிசார்ட்டுக்கள் யானை வழித்தடங்களில் கட்டப்பட்டுள்ளதாகவும், இதனால்  யானைகள் வழித்தடம் தடுக்கப்படுவதாகவும் கூறி யானை ராஜேந்திரன் என்பவர் சென்னை  உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த  நீதிபதிகள், யானை வழித்தடங்களில் உள்ள கட்டிடங்களை இடிக்கு உத்தரவிட்டனர்.  இதனை தொடர்ந்து, யானைகள் வழிட்டத்தில் ரிசார்ட், காட்டேஜ் வைத்துள்ள 39  பேர் உச்சநீதிமன்றம் சென்றனர். இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இம்மாதம் 14ம் தேதி வெளியிடப்பட்டது.

அதில்,  யானைகள் வழித்தடம் தொடர்பாக உயர்நீதிமன்றம் ஏற்கனவே வெளியிட்டுள்ள உத்தரவு  பொருந்தும். மேலும், இது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ள ஓய்வு பெற்ற நீதிபதி  வெங்கட்ராமன் தலைமையில் மூவர் அடங்கிய குழுவையும் அமைத்தது. இந்த குழு  அங்கு ஆய்வு மேற்கொண்டு அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது. இந்நிலையில்,  இக்குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி வெங்கட்ராமன் நேற்று முன்தினம்  முதுமலை புலிகள் காப்பகத்திற்கு சென்றார். தொடர்ந்து, மசினகுடி,  பொக்காபுரம் மற்றும் மாவனல்லா போன்ற பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.  மேலும், சிறப்பு குழுவிற்கான அலுவலகம் அமைப்பது தொடர்பாக தெப்பக்காட்டில்  ஆய்வு செய்தார். இவருடன் நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா,  முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் கவுசல் உட்பட உயர் அதிகாரிகள் பலர்  உடனிருந்தனர்.

தொடர்ந்து ஓய்வு பெற்ற நீதிபதி வெங்கட்ராமன்  கூறுகையில், உச்ச நீதிமன்றம் 4 மாதங்களுக்குள் ஆய்வு செய்து அறிக்கையை  தாக்கல் செய்ய கூறியுள்ளது. குழுவினர் ஆய்வு மேற்கொள்ள ஏற்றவாறு, முதுமலை  தெப்பக்காடு பகுதியில் அலுவலகம் அமைப்பது குறித்து இரு நாட்கள் ஆய்வு  மேற்கொள்ளப்பட்டது. இது முதற்கட்ட ஆய்வு மட்டுமே. மேற்கொள்ளப்பட்ட  ஆய்வு குறித்து குழுவில் இடம் பெற்றுள்ள மற்ற இருவரிடம் வீடியோ  கான்பிரசன்சிங் மூலம் தகவல்கள் பரிமாறப்பட்டு, அடுத்தக்கட்ட நகர்வுகள்  குறித்து முடிவுகள் மேற்கொள்ளப்படும். மேலும், அலுவலகம் அமைக்கப்பட்ட  பின்னரே தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முடிவு  செய்யப்படும், என்றார்.

Tags : Inspection ,Committee ,Supreme Court ,
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கு...