விதிமீறல் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுத்த குன்னூர் நகராட்சி கமிஷனர் திடீர் பணியிட மாற்றம்

குன்னூர், அக். 29: விதி மீறிய கட்டிடங்களுக்கு சீல் வைக்க நடவடிக்கை எடுத்த குன்னூர் நகராட்சி கமிஷனர் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். குன்னூர் நகராட்சியின் முன்னாள் கமிஷனராக சரஸ்வதி பணியாற்றியபோது விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு சீல் வைத்தல், பேருந்து நிலையத்தில் உள் வாடகைக்கு விடப்பட்ட கடைகளை அகற்றுதல் போன்ற பணிகளில் ஈடுபட்டார். இது பொதுமக்களிடம் கமிஷனருக்கு பாராட்டை பெற்றுத் தந்தது. இதையடுத்து, ஆளுங்கட்சியினர் அமைச்சர் வரை சென்று நெருக்கடி கொடுத்ததால் கமிஷனர் சரஸ்வதி பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

குன்னூர் நகரில் சீல் வைக்கப்பட்ட கட்டிங்களில் கட்டுமான பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதையடுத்து கமிஷனர் பொறுப்பை நகராட்சி இன்ஜினியர் கவனித்து வந்தார். அப்போது, ஊழியர்கள் முறையாக பணிகளை செய்வதில்லை எனவும் கமிஷனரை நியமிக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். குன்னூர் நகராட்சி கமிஷனராக பாலு நியமிக்கப்பட்டார். இவர் பதவியேற்ற ஆரம்பல காலம் முதலே விதி மீறிய கட்டிடங்களுக்கு சீல் வைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார். மேலும் கமிஷனர் பாலு தலைமையில் கொரோனா தடுப்பு நடவடிக்ைக சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது. ஆனால் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் குறித்து நடவடிக்கை எடுத்து வந்த நகராட்சி கமிஷனர் பாலுவின் செயல்பாடுகள் பிடிக்காத ஆளுங்கட்சியினர் மீண்டும் அமைச்சர் வரை சென்று கமிஷனரை மாற்ற வேண்டும் என அழுத்தம் கொடுத்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் குன்னூர் பெட்போர்டு சாலையில் உள்ள விதி மீறிய கட்டிடங்களுக்கு சீல் வைக்க சென்ற நகராட்சி அதிகாரிகளை ஆளுங்கட்சியினர் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் நகராட்சி அதிகாரிகள் கட்டிடத்திற்கு சீல் வைக்காமல் திரும்பினர். அன்று மாலையே நகராட்சி கமிஷனர் பாலு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விதிமீறல் கட்டிடங்கள் குறித்து நடவடிக்கை எடுத்தால் கமிஷனர்கள் மாற்றப்படுவது வாடிக்கையாக உள்ளது. எனவே இது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>