×

நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புதிய தார்ச்சாலை அமைக்க வேண்டும்

பொள்ளாச்சி, அக்.29: பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை பணியை தீபாவளிக்குள் நிறைவு செய்து புதிய தார்ச்சாலை அமைக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட வார்டு பகுதிகளில், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, ரூ.120 கோடியில்  குடிநீர் வடிகால் வாரியம் மூலம் பாதாள சாக்கடை பணி துவங்கப்பட்டது. இதில், வெங்கடேசா காலனி, மகாலிங்கபுரம், ஜோதி நகரில் குறிப்பிட்ட பகுதி என சில இடங்களில் மட்டும் பணி விரைந்து மேற்கொள்ளப்பட்டது. மீதமுள்ள இடங்களில், பணி மந்தமானது.

கடந்த மார்ச் மாதம் வரை சுமார் 70 சதவீத பணிகளே மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்பின், ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை கொரோனா ஊரடங்கு காரணமாக பாதாள சாக்கடை பணி தடைபட்டுள்ளது. கடந்த மூன்று மாதமாக மீண்டும் பாதாளா சாக்கடை பணி நடந்து வருகிறது. அனால், அப்பணியை முறையாக மேற்கொள்ளாமல் குடிநீர் வடிகால் வாரியத்தினர் இழுத்தடிப்பதாக தொடர்ந்து புகார் எழுந்தது. இதற்கிடையே, பாதாளா சாக்கடை நிறைவடைந்த சில இடங்களில்,  புதிதாக சாலை அமைக்கவில்லை. குற்றச்சாட்டு எழுந்தது.

அவ்வப்போது அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்தி பாதாள சாக்கடை பணியை விரைந்து மேற்கொள்ள அறிவுறுத்தினாலும், சம்பந்தப்பட்ட ஒப்பதந்தாரர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே நேற்று நகராட்சி அலுவலகத்தில், பாதாள சாக்கடை பணி மற்றும் புதிய சாலை அமைப்பது குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமை தாங்கினார். சப்-கலெக்டர் வைத்திநாதன், மத்திய வங்கி தலைவர் கிருஷ்ணகுமார், நகராட்சி ஆணையாளர் காந்திராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், பாதாள சாக்கடை பணி மற்றும் சாலை அமைக்கும் ஒப்பந்ததாரர்கள் பலர் கலந்து கொண்டனர்.இந்த கூட்டத்தில் அதிகாரிகள் பேசுகையில்,`நகராட்சிக்குட்பட்ட குறிப்பிட்ட சில வார்டுகளில் இன்னும் பாதாளா சாக்கடை பணி முழுமையாக நிறைவு செய்யாமல் உள்ளது.

இதுவரை 80 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளதாக தெரிய வருகிறது. ஆனால், மீதமுள்ள பணியை இன்னும் விரைந்து நிறைவு செய்யாமல் காலம் தாழ்த்துவதால், பொதுமக்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் உள்ளோம்.மாதந்தோறும் ஆய்வு கூட்டம் நடக்கும்போது, விரைந்து பணியை நிறைவு செய்வதாக உறுதி அளிக்கப்படுகிறதே தவிர, அதை செயல்படுத்துவதாக தெரியவில்லை. வர்த்தக நிறுவனங்கள் நிறைந்த கடைவீதி, மார்க்கெட் ரோடு, குமரன்நகர் பகுதி மற்றும் சில குடியிருப்பு பகுதிகளிலும் பாதாள சாக்கடை பணியை முழுமையாக நிறைவு செய்யாததால், வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் அவதிப்பட வேண்டி உள்ளது.தீபாவளிக்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில், அதற்குள் அப்பணியை முழுமையாக நிறைவு செய்து புதிய சாலை அமைக்க வேண்டும் என ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தினர்.

Tags : areas ,
× RELATED ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் மிளகாய் உலர் களம் அமைக்க கோரிக்கை