×

ஆள் இல்லாத வீடுகளை நோட்டமிட்டு கைவரிசை காட்டும் தீபாவளி திருடர்கள்

கோவை, அக்.29:  ஆள் இல்லாத வீடுகளை நோட்டமிட்டு தீபாவளி திருடர்கள் நகை, பணத்தை கொள்ளையடித்து செல்கின்றனர். கோவை சுந்தராபுரம் முத்தையா நகரை சேர்ந்தவர் நிகாஸ் (29).  மருந்து விற்பனை பிரதிநிதி. இவர் மனைவிக்கு காங்கேயத்தில் மாமனார் வீட்டில் வளைகாப்பு விழா கடந்த 24ம் தேதி நடந்தது. இதில் நிகாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் சென்று விட்டனர். நேற்று முன்தினம் மாலை நிகாஸ் தனது வீட்டிற்கு திரும்ப வந்தார். அப்போது கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டில் இருந்த 45 பவுன் தங்க நகை, லேப்டாப் திருடப்பட்டிருந்தது. இது தொடர்பாக ேபாத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீடு பூட்டியிருந்ததை நோட்டம் விட்டு திட்டமிட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக தெரிகிறது.

நிகாஸ் வீட்டிற்கு அருகே பூட்டப்பட்டிருந்த மேலும் 2 வீடுகளின் கதவு பூட்டை உடைத்து அதே திருடர்கள் புகுந்துள்ளனர். அந்த வீட்டில் நகை, பணம் எதுவும் கிடைக்கவில்லை. வீட்டில் இருந்த பொருட்களை கலைத்து போட்டுவிட்டு திருடர்கள் சென்று விட்டனர். திருடர்கள் வந்து சென்ற காட்சி அதே பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருப்பதாக தெரியவந்துள்ளது. இதை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.தீபாவளியையொட்டி வெளியூர் திருடர்கள் குறிப்பாக ‘ஹவுஸ் பிரேக்’ திருடர்கள் கோவையில் முகாமிட்டிருப்பதாக தெரிகிறது. இவர்கள் பகல் நேரத்தில் பூட்டிய வீடுகளை பைக்கில் சென்று நோட்டம் விட்டு இரவு நேரத்தில் கைவரிசை காட்டி வருவதாக தெரிகிறது. தீபாவளிக்காக கடை வீதிக்கு பொருட்கள் வாங்க செல்லும் பொதுமக்களின் வீடுகளை இந்த திருடர்கள் நோட்டம் விடுவதாக  குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. போலீசார் ஆள் இல்லாத வீடுகள், திருடர்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளை கண்காணித்து ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும். திருடர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Tags : Deepavali ,thieves ,houses ,
× RELATED தீபாவ‌ளி ஏன் கொ‌ண்டாட‌ப்படு‌கிறது!