தொழிலாளர்களுக்கான புதிய நலத்திட்ட உதவிகள்: மாவட்ட உதவி ஆணையர் தகவல்

காஞ்சிபுரம்: தொழிலாளர்களுக்கான புதிய நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளதாக, காஞ்சிபுரம் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் விமலநாதன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை. தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்துக்கு தொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழிற்சாலைகள், கடைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், தோட்ட நிறுவனங்கள் போன்ற அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள், அவர்களை சார்ந்தோர்களுக்கு புதிய நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்த 78வது வாரியக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி, அரசு அங்கீகாரம் பெற்ற தையல்பயிற்சி நிலையங்களில் தேர்ச்சி பெறும் தொழிலாளர்கள், அவர்களை சார்ந்தவர்களுக்கு தையல் எந்திரம் வாங்குவதற்கு உதவித்தொகை வழங்கப்படும்.

பள்ளிகளில் பயிலும் தொழிலாளர்களின் பிள்ளைகள் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மழலையர் பள்ளி முதல் 5ம் வகுப்பு வரை ரூ.1000, 6 முதல் 8ம் வகுப்பு வரை ரூ.2000, 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.3000 கல்வி உதவித்தொகை வழங்கப்படும். விளையாட்டு திறன் மிக்க தொழிலாளர்களின் பிள்ளைகளை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாவட்ட அளவிலான உள்விளையாட்டு, வெளி விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்டு மாநில அளவில் முதலிடம் பெற்றவர்களுக்கு 6 முதல் 8ம் வகுப்பு வரை ரூ.3000, 9 முதல் 12ம் வகுப்பு வரை ரூ.5000, விதிமுறைகளுக்கு உட்பட்டு வழங்கப்படும். இதுபோல் பல்வேறு புதிய நலத்திட்டங்களை பெற, தொழிலாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதில், தொழிலாளியின் மாத ஊதிய உச்சவரம்பு அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி சேர்த்து ரூ.25 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நலவாரியம், தேனாம்பேட்டை, சென்னை - 6 என்ற முகவரியில் தொடர்புகொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>