×

அரசியல்வாதிகளுடன் அதிகாரிகளும் கைகோர்த்து காந்திமார்க்கெட்டை வைத்து நடத்தும் மெகா அரசியல்

திருச்சி, அக்.28: காந்திமார்க்கெட்டை வைத்து அரசியல்வாதிகளுடன் இணைந்து அரசு அதிகாரிகளும் அரசியல் செய்வதாக குற்றம்சாட்டியுள்ள வியாபாரிகள், விரைவில் காந்தி மார்க்கெட்டை திறக்காவிட்டால், ஆதார் கார்டு, ரேஷன் கார்டுகளை கலெக்டரிடம் ஒப்படைக்கும் போராட்டம் நடத்தப்போவதாக எச்சரித்துள்ளனர். திருச்சியின் பழமை மாறா சின்னமாக விளங்கும் இடங்களில் காந்திமார்க்கெட்டும் ஒன்று. காந்தி அடிக்கல் நாட்டி கட்டப்பட்டதால் காந்தி மார்க்கெட் என பெயர் சூட்டப்பட்டது. காந்தி மார்க்கெட்டில் 6.5 ஏக்கர் பரப்பளவில் 850க்கும் மேற்பட்ட நிரந்தரக்கடைகள் இயங்கி வருகின்றன. தரைக்கடைகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் கிட்டத்தட்ட 3,000க்கும் மேற்பட்ட கடைகள் இதில் அடக்கம். இந்த மார்க்கெட்டை நம்பி கிட்டத்தட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.

1928ம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த மார்க்கெட் நூற்றாண்டு விழா கொண்டாடாமலேயே இடித்து தரைமட்டமாகிவிடுமோ என்ற ஐயப்பாடு எழுந்துள்ளது. காந்தி மார்க்கெட்டுக்கு மாற்றாக சுமார் ரூ.77 கோடி மதிப்பீட்டில் திருச்சியிலிருந்து 12 கி.மீ., தொலைவில் கள்ளிக்குடியில் 9 ஏக்கர் பரப்பளவில் 1,000 கடைகள் கட்டப்பட்டது. ஆனால், அழுகும் பொருட்களான காய்கறி, பழங்கள், பூக்கள் வியாபாரத்தை அங்கு மாற்றினால் அனைத்தும் பாதிக்கப்படும்.
வியாபாரிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படுவதோடு, விபத்து, உரிய பாதுகாப்பின்மையால் பாதிக்கப்படுவர் எனக்கூறி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் அங்கு செல்லாமல் இங்கேயே வியாபாரம் செய்து வந்தனர். இதற்கிடையே அரசும் பலகட்டமாக பேச்சுவார்த்தை நடத்தி எந்த பலனுமில்லை.

வியாபாரிகள், தொழிலாளிகள் என பல ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்படும் எனக்கூறி வியாபாரிகள் விடாப்பிடியாக இங்கேயே இருந்ததால் அரசு தரப்பில் எதுவும் செய்ய இயலவில்லை. இந்நிலையில், வியாபாரிகளை நகர்த்தும் வகையில் தொக்காக கொரோனா பெருந்தொற்று பரவியது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. கொரோனாவை காரணம் காட்டி காந்திமார்க்கெட்டை மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகம் மூடியது. வியாபாரிகள் பொன்மலை ஜீ கார்னர் ரயில்வே மைதானத்திலும், பழைய பால்பண்ணை சாலையிலும் வியாபாரம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். ஆனால், பலக்கட்ட தளர்வுகளுடன் கொரோனா பொதுமுடக்கம் அமலுக்கு வந்ததால், போக்குவரத்து சகஜமாகிவிட்டது. மக்களும் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டனர். காந்தி மார்க்கெட்டும் திறக்கப்படும் என எதிர்பார்ப்பில் வியாபாரிகள் இருந்தனர்.

இதற்கிடையே, அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் தலைமையில் செயல்படும் மனிதவளர் சங்கம் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி என்பவர், காந்திமார்க்கெட்டை இடமாற்றம் செய்ய வேண்டும் எனக்கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததை காரணம் காட்டி, மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகம் காந்திமார்க்கெட்டை திறக்காமல் உள்ளது. காந்தி மார்க்கெட் வியாபாரிகள் போராட்டம் நடத்தலாம் என்ற நிலைக்கு சென்றபோது, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய கலெக்டர் சிவராசு, வியாபாரிகளுக்கு சாதகமாக பேசுவதுபோல் பேசிவிட்டு, நீதிமன்றத்தில் தான் தாக்கல் செய்த பதில் மனுவில் வியாபாரிகளுக்கு சாதகமாக எந்த அம்சத்தையும் குறிப்பிடாமல், காந்தி மார்க்கெட் இடையூறாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார். இது வியாபாரிகளுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தவிர இந்த விவகாரத்தில் உள்ளூர் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் மவுனம் காத்து வருகின்றனர். இதுவும் வியாபாரிகளுக்கு பெரும் மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து திருச்சி காந்திமார்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் தலைவர் கமலக்கண்ணன் கூறுகையில், ‘அரசே காந்தி மார்க்கெட்டை மாற்ற வேண்டும் என்று துடிக்கிறது. மூதாதையர் காலத்திலிருந்து இந்த மார்க்கெட்டில் தான் வியாபாரம் செய்து வருகிறோம். திடீரென ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக எங்களை காலி செய்ய சொல்லி வற்புறுத்துகின்றனர். நகரம் வளர்ச்சியடைய வேண்டும் என்று தான் அனைவரும் விரும்புவர். நகரின் வளர்ச்சியில் எங்களுக்கும் பங்கிருக்கிறது. ஆனால், இந்த நகரே எங்களை போன்ற வியாபாரிகளால் தான் செழித்து வளர்ந்தது என்பதை மறந்து ஏதோ கிள்ளுக்கீரையாக எண்ணி எங்களை பிடுங்கி வீச நினைப்பது நியாயமா? கள்ளிக்குடி மார்க்கெட் தொலைவில் உள்ளது. போதிய பாதுகாப்பு இல்லை என்பதால் நாங்கள் செல்ல மறுத்து வருகிறோம். காந்திமார்க்கெட் அருகே உள்ள பழைய பால்பண்ணையில் பல ஏக்கர் நிலம் காலியாக உள்ளது. அங்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை செயல்படுத்தலாம். அல்லது எங்களுக்கு அங்கு கடைகளை கட்டித்தரலாம்.

அல்லது மகளிர் சிறைச்சாலையை கள்ளிக்குடி போன்ற பகுதிக்கு மாற்றிவிட்டு எங்களுக்கு அங்கு கடைகள் கட்டித்தரலாம். இப்படி எந்த திட்டமிடலும் இல்லாமல் கள்ளிக்குடியில் கடைகளை கட்டிவிட்டோம் அங்கு தான் செல்ல வேண்டும் என நிர்பந்திப்பது எங்களை வேதனைப்படுத்துகிறது. அரசை எதிர்த்து அதிமுகவின் முன்னாள் அமைச்சர் நடத்தும் சங்கம் வழக்கு தொடுக்குமா? இது அரசே திட்டமிட்டு இவரை களத்தில் இறக்கிவிட்டு எங்களை துரத்தியடிக்கப்பார்க்கிறது.
அரசியல்வாதிகளுடன் இணைந்து அதிகாரிகளும் வியாபாரிகளுக்கு எதிராக செயல்படுகின்றனர். காந்திமார்க்கெட் விவகாரத்தில் அரசும், மாவட்ட நிர்வாகமும் விரைந்து ஒரு நல்ல முடிவு எடுக்காவிட்டால், காந்தி மார்க்கெட் வியாபாரிகள், தொழிலாளிகள் குடும்பத்தினர் ஒட்டுமொத்தமாக தங்களது ஆதார் கார்டு, ரேஷன் கார்டுகளை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் போராட்டத்தை வெகு விரைவில் நடத்துவோம். நாளை (இன்று) காந்திமார்க்கெட் வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இதில் மாவட்ட நிர்வாகம் நல்ல பதிலை தரும் என எதிர்பர்க்கிறோம்’ என்றார்.

Tags : politicians ,
× RELATED ஊழல் வழக்கில் சிக்கிய பின் பாஜகவால் ‘புனிதம்’ அடைந்த பிரபலங்கள்