×

மனு அளிக்கும் போராட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்காததை கண்டித்து விசி கட்சியினர் சாலை மறியல்

திருவாரூர், அக்.28: திருவாரூரில் மனு அளிக்கும் போராட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்காததை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குறித்து அவதூறு பரப்பி வரும் பிஜேபியை சேர்ந்த எச்.ராஜா காயத்ரி ரகுராம் நடிகைகள் குஷ்பு, கல்யாணி மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் வகையில் பேசிவரும் பிஜேபி மாநில தலைவர் முருகன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோரி நேற்று திருவாரூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம் நடத்தப்போவதாக தெரிவிக்கப்பட்டது. இதையொட்டி முன்னதாக விளமல் கடைத்தெருவிலிருந்து பேரணியாக புறப்பட்டு கலெக்டர் அலுவலகம் சென்றனர்.

அப்போது கலெக்டர் அலுவலகம் முன்பாகவே போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் ஆத்திரம் அடைந்த கட்சியினர் திடீரென கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தஞ்சை- நாகை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட கட்சியின் மாவட்ட செயலாளர்கள் வடிவழகன், செல்வன், பொருளாளர் வெற்றி, துணை செயலாளர்கள் உட்பட 120 பேரை போலீசார் கைது செய்து திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள இ திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைத்து மாலையில் விடுதலை செய்தனர்.

Tags : protest ,
× RELATED 6 வழிச்சாலை பணிக்கு எதிர்ப்பு...