×

வயல் வரப்பில் தாவரங்களை வளர்ப்பதால் நெற்பயிரை பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்காமலேயே பாதுகாக்கலாம்

நீடாமங்கலம்,அக்.28: வயலின் வரப்பில் தாவரங்களை வளர்ப்பதனால் நெற்பயிர்களை பூச்சிக்கொல்லி மருந்து ெதளிக்காமலேயே பாதுகாக்கலாம் என பண்ணைப்பள்ளி பயிற்சியில் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி வட்டாரம் செம்மங்குடி கிராமத்தில் வேளாண்மை தொழில் நுட்ப முகமையின் கீழ் பண்ணைப்பள்ளி பயிற்சி வேளாண்மை உதவி இயக்குநர் விஜயகுமார் தலைமையில் நடந்தது.அப்போது அவர் பேசுகையில், சம்பா மற்றும் தாளடி பருவநெல்சாகுபடி தற்போது மும்முரமாக நடை பெற்று வரும் இச்சூழலில் விவசாயிகள் வேளாண் சுற்றுச்சூழலை பாதிக்காத வண்ணம் நெல்சாகுபடியினை மேற்கொள்வது மிகவும் அவசியம். அளவுக்கு அதிகமாக ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்துவதால் வேளாண்மைக்கு பக்க பலமாக இருக்கின்ற மண்ணில் உள்ள நுண்ணுயிரிகள்,மண்புழு மற்றும் நன்மை செய்யும் பூச்சிகள் சேர்ந்து அழிந்து விடுகின்றன.

எனவே வேளாண் சுற்றுச்சூழல் பாதுகாப்போடு நெல் சாகுபடியை மேற்கொள்ள வேண்டும் என்றார். ஒருங்கிணைந்த பண்ணை மேலாண்மை தலைப்பில் பயிற்சி நடந்தது.பயிற்சியில் சிறப்பு அழைப்பாளர் டான் போஸ்கா வேளாண் கல்லூரி உதவி ராசிரியர்அருணா கலந்து கொண்டு விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார். அப்போது பூச்சி தாக்குதலிலிருந்து பயிரினை பாதுகாக்க சோலார் விளக்கு பொறி மற்றும் பூச்சிகளை கட்டுப்படுத்தும் ஒட்டுண்ணிகள் அட்டைகளை பயன் படுத்தலாம். பயிரினை நோயிலிருந்து பாதுகாக்க ஏக்கருக்கு 1 லிட்டர் வீதம் சூடோமோனாஸினை தயிர் அல்லது சாணிப்பால் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு தெளித்து நோய் வரும் முன் பாதுகாக்கலாம்.


நெல் வயலின் வரப்புகளில் நெற்பயிருக்கு தீமை விளைவிக்கின்ற பூச்சிகளை கவர்ந்து இழுக்கக்கூடிய வெண்டைக்காய், ஆமணக்கு,சூரியகாந்தி மற்றும் செவ்வந்தி போன்ற பூ தாவரங்களை வளர்ப்பதன் மூலம் நெற் பயிரினை பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்காமலேயே பாதுகாக்கலாம் என விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினார். கொரடாச்சேரி வட்டார துணை வேளாண்மை அலுவலர் துரைராஜ் மற்றும் பலர் பேசினர்.ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர்கள் விஜயன்,பிரதீபா வட்டார தொழில் நுட்ப மேலாளர் செல்வகுமார்,உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் ஶ்ரீநிதி,பிரியங்கா செய்திருந்தனர்.

Tags : plants ,field ,
× RELATED பீட்ரூட் கீரை மசியல்