×

நாகை மாவட்டத்தில் 58 ஆயிரம் டன் குறுவை நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது

நாகை,அக்.28: நாகப்பட்டினம் மாவட்டத்தில் 58 ஆயிரம் மெட்ரிக் டன் குறுவை நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்று முதுநிலை மண்டல மேலாளர் சண்முகநாதன் கூறினார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: காவிரி டெல்டா மாவட்டத்தில் பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து குறிப்பிட்ட காலத்தில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு நடப்பு ஆண்டு குறுவை சாகுபடி இலக்கை மிஞ்சியுள்ளது. ஆனால் அறுவடை நேரத்தில் திடீரென மழை பெய்த காரணத்தால் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டது. இருப்பினும் விவசாயிகள் குறுவை நெல்லை அறுவடை செய்து நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்து வருகின்றனர்.

நாகை மாவட்டத்தில் குறுவை நெல் கொள்முதல் செய்வதற்காக கூடுதல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என்று விவசாயிகளின் கோரிக்கை வைத்தனர். இதை ஏற்று நடப்பு ஆண்டில் 172 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டது. கொள்முதல் வேகமாக நடைபெறுவதால் மேலும் 2 கொள்முதல் நிலையங்கள் கூடுதலாக திறக்கப்பட்டு தற்போது மாவட்டத்தில் 174 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு ஆயிரம் மூட்டைகள் வீதம் குறுவை நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கொள்முதல் நிலையங்களில் ஏற்படும் கால தாமதங்களை தடுக்க முதுநிலை மண்டல மேலாளர் சண்முகநாதன் மற்றும் தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வுகள் நடத்தினர். அப்போது முதுநிலை மண்டல மேலாளர் சண்முகநாதன் கூறியதாவது: பருவமழை தொடங்க இன்னும் ஒரு சில நாட்களே உள்ளது. இதனால் விவசாயிகள் இருந்து உடனுக்குடன் நெல்லை கொள்முதல் செய்ய உத்தரவிட்டப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் 1 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் இதுவரை 58 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இதற்காக 12 ஆயிரத்து 442 விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ. 111 கோடியே 44 லட்சத்து 97 ஆயிரத்து 880 வரவு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளிடம் கொள்முதல் செய்த நெல்லில் 32 ஆயிரத்து 615 மெட்ரிக் டன் வெளி மாவட்டங்களுக்கு அரவைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள நெல் மூட்டைகள் குடோன்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் பொது ரக நெல் அதிக அளவில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நிர்ணம் செய்த இலக்கின் எஞ்சியுள்ள 48 ஆயிரம் மெட்ரிக் டன் இன்னும் சில தினங்களில் கொள்முதல் செய்யப்படும். ஒரு லட்சம் மெட்ரிக் டன் அளவிற்கு கொள்முதல் செய்வதற்கு தேவையான சாக்குகள் மற்றும் சணல் உள்ளிட்டவை தயார் நிலையில் உள்ளது.

Tags : district ,Nagai ,
× RELATED நாகை மாவட்டம் கீழ்வேளூரில் அருகே தீ...