×

போதிய வரி வருவாய் இல்லாததால் ஊட்டி நகராட்சியில் நிதி பற்றாக்குறை

ஊட்டி, அக். 28:    கொரோனா ஊரடங்கால் போதிய வரி வருவாய் இல்லாததால் ஊட்டி நகராட்சியில் நிதி ஆதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டி சர்வதேச சுற்றுலா நகரமாக உள்ளது. இங்குள்ள சுற்றுலா தளங்களை காண ஆண்டு முழுவதும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சுற்றுலா தொழிலை நம்பி ஊட்டி நகரம் மற்றும் நகருக்கு அருகில் ஏராளமான ஓட்டல்கள், காட்டேஜ்கள், லாட்ஜ்கள் உள்ளன. இதுதவிர பல்வேறு வணிக நிறுவனங்களும் உள்ளன. தூய்மை பணிகள் மற்றும் வளர்ச்சி பணிகள் அனைத்தும் ஊட்டி நகராட்சி மூலமாகவே மேற்கொள்ளப்படுகிறது. நகராட்சியின் நிதி ஆதாரமாக குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை இணைப்பு கட்டணம், சொத்து வரி, தொழில் வரி உள்ளிட்டவைகள் வசூலிக்கப்படுகின்றன.

குறிப்பாக தொழில் வரி முக்கிய வருவாயாக உள்ளது. ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள், காட்டேஜ்கள் போன்றவற்றின் மூலம் கிடைக்கும் வரி மூலம் நல்ல வருவாய் கிடைப்பது வழக்கம்.
இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து சுற்றுலா தளங்களும் மூடப்பட்டன. இதனால் சுற்றுலாவை நம்பியுள்ள அனைத்து தரப்பினருக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டது. குறிப்பாக சுற்றுலா பயணிகள் வருகை முற்றிலும் இல்லாமல் போன நிலையில் அனைத்து ஓட்டல்களும், காட்டேஜ்களும் மூடப்பட்டன. இதனால் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள அனைத்து தரப்பினரும் வேலை இழந்தனர். 5 மாதங்களுக்கு பிறகு கடந்த மாதம் முதல் பூங்காக்கள் மட்டும் திறக்கப்பட்ட போதும், சுற்றுலா பயணிகள் வருகை எதிர்பார்த்த அளவிற்கு இல்லை.

இதனால் பெரிய அளவிலான வருமானம் இல்லாத நிலையில், நகராட்சிக்கு செலுத்த வேண்டிய தொழில் வரியை செலுத்த வணிக நிறுவனங்கள், காட்டேஜ்கள், லாட்ஜ் உரிமையாளர்கள் ஆர்வம் காட்டவில்லை. சுமார் 80 சதவீதம் பேர் தொழில் வரி செலுத்தவில்லை. இதே போல் மற்ற வரிகளும் வசூல் ஆகவில்லை. இதனால் நகராட்சியின் நிதி ஆதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நிதி ஆதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஊட்டி நகராட்சியில் பணியாற்ற கூடிய நிரந்தர ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், கடந்த வாரம் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து ஒருவழியாக சமாளித்து சம்பளம் வழங்கப்பட்டது. ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு, அவர்களை ஒப்பந்தம் செய்த தனியார் நிறுவனம் சம்பளம் தராமல் இழுத்தடித்து வந்த நிலையில், அவர்களும் போராட்டத்தில் குதித்ததனர்.

தொடர்ந்து சுற்றுலா பயணிகள் வருகை இல்லாத நிலையில், நகராட்சியின் வரி வசூல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சம்பளம் வழங்குவதற்கே நிதி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா கால கட்டம் முடிந்து, சுற்றுலா பயணிகள் பழைய படி எவ்வித கட்டுபாடுகளும் இன்றி வந்து சென்றால், மட்டுமே ஊட்டியில் சுற்றுலா தொழில் புத்துயிர் பெற்று அதன் மூலம் நகராட்சியின் நிதி பற்றாக்குறை சீராகி, வருவாய் உயர வாய்ப்புள்ளது. அதுவரை இதே நிலை தான் நீடிக்கும். ஊட்டி நகராட்சி மட்டுமின்றி மற்ற நகராட்சிகள், உள்ளாட்சி அமைப்புகளில் இதே நிலை தான் நீடிக்கிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : municipality ,Ooty ,
× RELATED கோத்தகிரி நேரு பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்