×

காவலர்களுக்கான பேரிடர் மீட்பு பயிற்சி முகாம்

ஊட்டி, அக். 28: காவல் துறையினருக்கான பேரிடர் மேலாண்மை குறித்த 2 நாள் பயிற்சி முகாம் ஊட்டியில் நேற்று துவங்கியது. மலை மாவட்டமான நீலகிரியில் பருவமழை காலங்களில் சாலைகள், குடியிருப்புகள் மீது மரம் விழுதல், மண் சரிவு ஏற்படுவது உள்ளிட்ட இடர்பாடுகள் ஏற்படுகின்றன. இவற்றை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நீலகிரி மாவட்ட காவல்துறையில் 5 உட்கோட்டங்களில் 5 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் உட்பட 32 காவல் நிலையங்கள் உள்ளன. இதன் தொடர்ச்சியாக காவலர் பேரிடர் மீட்பு குழு அமைத்து பேரிடர் சமயங்களில் மீட்பு பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து காவல் நிலையங்களிலும் இருந்தும், பேரிடர் மீட்புக்கென மொத்தம் 60 காவலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கான பேரிடர் மீட்பு மற்றும் மேலாண்மை குறித்த இரண்டு நாள் பயிற்சி முகாம் ஊட்டியில் உள்ள சிறுவர் மன்றத்தில் நேற்று துவங்கியது. இதில் மாவட்ட எஸ்பி. சசிமோகன் பங்கேற்று பயிற்சி முகாமினை துவக்கி வைத்தார். காவலர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவில் இருந்து ஒரு எஸ்.ஐ. மற்றும் 4 பேர் பயிற்சி அளித்தனர். இப்பயிற்சியில் மரம் விழுதல், மண்சரிவு, மீட்பு பணிகள் போன்றவற்றில் ஈடுபடுவது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. இன்று ஊட்டி அரசு கலை கல்லூரியில் மீட்பு பணிகள் குறித்த செயல்முறை விளக்கம் அளிக்கப்பட உள்ளது. காவலர்களுக்கான பயிற்சிகள் முடிந்தவுடன் மாவட்ட காவலர் பேரிடர் மீட்பு குழு அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

Tags : Disaster recovery training camp ,guards ,
× RELATED காவலாளியை சுட்டுக் கொன்ற வனத்துறையினர் 2 பேர் கைது