×

தொடர்ந்து அரங்கேறும் மணல் கொள்ளை

ஆத்தூர, அக்.23:  கெங்கவல்லி, வீரகனூர் பகுதியில் சுவேத நதி படுகையில், மணல் கொள்ளை அதிகரித்துள்ளது. வீரகனூர் வழியாக பெரம்பலூர் மாவட்டத்திற்கும், தலைவாசல் வழியாக கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டு காவிரி ஆற்று மணல் என்ற போர்வையில் விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
சுவேத நதியில் ஆளுங்கட்சியினரின் ஆசியோடு, மணல் கடத்தல் ஜரூராக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து வருவாய்த்துறையினரிடம் புகார் தெரிவித்தால், கண் துடைப்பிற்காக உள்ளூரில் வீடு கட்டுபவர்கள் மற்றும் மாட்டு வண்டிக்காரர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். பெருமளவில் மணல் கடத்தலில் ஈடுபடுபவர்களை கண்டு கொள்வதேயில்லை. உள்ளூர் போலீசாரை கைக்குள் போட்டுக்கொண்டு, மணல் கடத்தல் அதிகரித்துள்ளது.

தொடர் மணல் கொள்ளையால், தற்போது ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ள போதிலும் நிலத்தடி நீர்மட்டம் உயராத நிலை காணப்படுகிறது. இதனால், விவசாய கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகள் வறண்ட நிலையிலேயே உள்ளன. விவசாயம் முற்றிலும் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும், ஆற்றில் பல இடங்களில் அதிக அழத்தில் மணல் தோண்டி எடுப்பதால் பெரிய அளவில் பள்ளங்கள் தோன்றியுள்ளது. இதனால், ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுக்கும் சமயங்களில் உயிரிழப்பு அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல்துறை மணல் கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags :
× RELATED ₹1.50 லட்சம் கொள்ளை