×

கொரோனா தாக்கம் குறைந்தது எப்படி?

நாமக்கல், அக். 23: நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தாக்கம் குறைந்து வருவது குறித்து பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.  
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 15 ஆரம்ப சுகாதார நிலையங்கள், மற்றும் அரசு மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை தினமும் செய்யப்படுகிறது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை பொறுத்தவரை அங்கு பணியாற்றும் டாக்டர்கள், கிராமங்களில் மருத்துவ முகாம் நடத்தி, பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து வந்தனர். ஆனால் சமீப காலமாக, மருத்துவ முகாமில் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள பொது மக்கள் முன்வருவதில்லை. மருத்துவ குழுவினரின் வாகனத்தை பார்த்த உடனே, பொதுமக்கள் ஓடி விடும் நிலை இருக்கிறது.
நாமக்கல் நகராட்சி பகுதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் இருக்கும் இடங்களில் நகராட்சி மூலம் மருத்துவ முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், அங்கு கொரோனா பரிசோதனை செய்து கொள்ள பொதுமக்கள் யாரும் முன் வருவதில்லை. இதனால் கபசுர குடிநீரை மட்டும் நகராட்சி ஊழியர்கள் பொதுமக்களுக்கு கொடுத்து விட்டு சென்று விடுகிறார்கள்.

மேலும், தினமும் ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், சராசரியாக 50 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டாலும், அனைவருக்கும் நெகட்டிவ் என ரிசல்ட் வந்துவிடுகிறது. இதனால், கொரோனா பரிசோதனை செய்யும் மனநிலை மருத்துவர்களுக்கும் மாறிவிடுகிறது. இதன் காரணமாக, கடந்த 4 நாட்களாக நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றி வந்த பெரும்பாலான லேப்டெக்னீசியன்கள் நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சென்றுவிட்டதால், கிராமங்களுக்கு சென்று, கொரோனா பரிசோதனை செய்ய ஆட்கள் பற்றாக்குறையும் நிலவுவதாக டாக்டர்கள் கூறுகிறார்கள்.
நோய் தடுப்பு நடவடிக்கையின் தீவிரம் காரணமாக, கொரோன பாதிப்பு குறைந்துள்ளதா அல்லது, பரிசோதனை முடிவுகள் பெரும்பாலன நபர்களுக்கு நெகட்டிவ் என வருவதால், நோய் பாதிப்பு எண்ணிக்கை குறைத்து காட்டப்படுகிறதா என டாக்டர்களுக்கே தற்போது சந்தேகம் வலுத்துள்ளது. நேற்று மாவட்டம் முழுவதும் 74 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலகம் வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலைய பகுதியிலும் தினமும் 200 பேருக்கு சாம்பிள் எடுக்கவேண்டும் என மருத்துவ அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தாமாக முன் வந்து பரிசோதனை செய்து கொள்வது நல்லது. மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கை காரணமாக நோய் தொற்று குறைந்துள்ளது. இருப்பினும் பண்டிகை காலமாக இருப்பதால், தடுப்பு நடவடிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. சாம்பிள் எடுக்கும் எண்ணிக்கையும் அதிகரிக்க வேண்டும் என அனைத்து டாக்டர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனர்.

Tags :
× RELATED மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு