×

மேம்பால பணியை முடிக்கக் கோரி சங்கு ஊதி நூதன போராட்டம்

திருச்செங்கோடு, அக்.23: நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தாலுகா எலச்சிபாளையம் ஒன்றியம் கொத்தம்பாளையம் அருகே, திருமணிமுத்தாற்றின் குறுக்கே சுமார் 100 அடி நீள தரைப்பாலம் உள்ளது. இந்த பாலத்தைக் கடந்து 10 கிராமங்களைச் சேர்ந்த மக்கள், வெளியூருக்கு செல்வார்கள். விவசாயத் தொழிலாளர்கள், மாணவ, மாணவிகள் இந்த பாலத்தை அதிகம் பயன்படுத்துகின்றனர். மழை காலங்களில் இந்த தரைப்பாலத்திற்கு மேல் வெள்ளம் செல்லும். அப்போது, தண்ணீரில் நடந்து பாலத்தை கடக்கும் பொதுமக்கள், கீழே விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர்.

தரைபாலத்தை மேம்பாலமாக மாற்ற வேண்டும் என்ற 20 ஆண்டு கால கோரிக்கையை ஏற்று, சமீபத்தில் ₹3.54 கோடி மதிப்பீட்டில் பணிகள் துவங்க அமைச்சர் தங்கமணி அடிக்கல் நாட்டினார்.  ஆனால், தூண்கள் நிறுத்த குழிகள் பறிக்கப்பட்டதுடன், பணிகள் அப்படியே நின்றது. தற்போது மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால், தரைப்பாலத்தில் 5 அடி உயரத்திற்கு மேல் வெள்ளம் செல்கிறது. இதனால், பாலத்தைக் கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.இதனால், அரசின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு மேம்பால பணிக்கு மலர்வளையம் வைத்து, சங்கு ஊதும் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்தது.   அதன்படி, நேற்று கொத்தம்பாளையம் தரைப்பாலத்திற்கு வந்த விவசாயிகள், மார்க்சிஸ்ட் கட்சியினர் தண்ணீரில் நின்று, தாரை தப்பட்டை முழங்க மலர்வளையம் வைத்து, சங்கு ஊதி போராட்டம் நடத்தினர். 11 மணிக்கு துவங்கிய போராட்டம் 12 மணிக்கு முடிந்தது.

தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு நாமக்கல் கலெக்டர் மெகராஜ் அதிகாரிகளுடன் வந்தார். அப்போது, மேம்பாலப் பணியை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். எலச்சிபாளையம் காவல் நிலையம் பின்புறமுள்ள 50 ஏக்கர் பரப்புள்ள ஏரி வறண்டு கிடக்கிறது. இந்த மழை வெள்ளத்தை ஏரிக்கு திருப்பி விட வேண்டும் என்று  தன்னார்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதன் மூலம் வெள்ள அபாயமும் தடுக்கப்படும். ஏரி நிரம்பினால்  நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து குடிநீர் தட்டுப்பாடும் தீரும்  என அவர்கள் கூறினர்.

Tags :
× RELATED வாக்கு இயந்திரம் பழுது வாக்குப்பதிவு தாமதம்