ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதி குமரி டி.ஆர்.ஓ வுக்கு கொரோனா தொற்று

நாகர்கோவில், அக்.23: குமரி மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களை கண்டறிய கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரை 2 லட்சத்து 10 ஆயிரம் பேரிடம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, கோவிட் கவனிப்பு மையங்கள், தனியார் மருத்துவமனைகள், வீட்டு தனிமை என்று 400க்கும் மேற்பட்டவர்கள் தற்போதும் சிகிச்சையில் உள்ளனர். மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 13 ஆயிரத்து 800க்கும் மேற்பட்டவர்கள் வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 240 பேர் பலியாகியுள்ளனர்.

இருப்பினும் மாவட்டத்தில் தினசரி 50க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு புதியதாக கண்டறியப்பட்டு வருகிறது. குமரி மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி கடந்த 2 நாட்களாக உடல் நல குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இதனை தொடர்ந்து அவர் தொல்லவிளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சென்று சளி மாதிரியை பரிசோதனைக்கு கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து நேற்று பரிசோதனை முடிவு வந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாக அதிகாரிகளுடன் ஆலோசனை, ஆய்வுக்கூட்டங்கள் போன்றவற்றில் கலெக்டர் மற்றும் அதிகாரிகளுடன் மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி பங்கேற்று வந்த நிலையில் கலெக்டர், சக அதிகாரிகள், அலுவலர்கள் அனைவரிடமும் சளி மாதிரி சேகரித்து பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கலெக்டர் அலுவலக வளாகம், டிஆர்ஒ அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகளில் சுகாதாரத்துறை பணியாளர்கள் நேற்று மாலையில் ஈடுபட்டனர்.

Related Stories: