தொட்டியம் அருகே ஏரிகுளம் கிராமத்தில் 4 வீடுகள் தீக்கிரை

தொட்டியம், அக்.23: தொட்டியம் அருகே ஏரிகுளம் கிராமத்தில் 4 வீடுகள் தீயில் எரிந்து நாசமானது. இதில் 5 ஆடுகள் கருகி பலியானது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொட்டியம் அருகே ஏரிகுளம் கிராமத்தில் வசிப்பவர் ஜெயலட்சுமி(55). நேற்று இவரது குடிசை வீட்டில் திடீரென தீப்பிடித்தது. இதில் பற்றிய தீ மளமளவென பரவியது. இதில் ஜெயலட்சுமியின் வீட்டின் அருகே வசித்த அங்கம்மாள்(65), மனோன்மணி(65), கோவிந்தராஜ் (45) ஆகியோரின் வீடுகளுக்கும் தீ பரவியது. இதில் வீடுகள் எரிந்து நாசமானது.

மேலும் மனோன்மணி என்பவருக்கு சொந்தமான 5 ஆடுகளும் தீ விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே கருகி பரிதாபமாக துடிதுடித்து இறந்தது. தகவலறிந்த முசிறி தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அனைத்தனர். மேலும் தீ பரவாமல் இருக்க தண்ணீர் பீச்சி அடித்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து தொட்டியம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தீ விபத்தில் வீடுகள் எரிந்து சேதமான சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு கலெக்டர் உரிய நிதி உதவியும், புதிய வீடுகள் கட்டித் தரவும் அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: