×

பேராவூரணி காவல் நிலையத்தில் போலீசார் பற்றாக்குறையால் குற்ற செயல்கள் அதிகரிப்பு


பேராவூரணி, அக். 23: பேராவூரணி காவல் நிலையத்தில் போலீசார் பற்றாக்குறையால் குற்ற செயல்கள் அதிகரித்துள்ளதோடு, தொடர் திருட்டு சம்பவங்களும் நடப்பதால் பொதுமக்கள், வியாபாரிகள் அச்சத்தில் உள்ளனர். எனவே கூடுதல் போலீசார் நியமிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். பேராவூரணி காவல் நிலையம் 1936ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் துவங்கப்பட்டது. காவல் நிலையம் துவங்கியபோதே 21 போலீசாருடன் செயல்பட்ட காவல் நிலையம் தற்போது 85 ஆண்டுகளை கடக்கும் நிலையில் மக்கள் தொகை பெருக்கத்துக்கேற்ப பணியிடங்களை அதிகரிக்காமல் குறைத்து 14 காவலர்களுடன் செயல்படுகிறது. அதிலும் விடுப்பு, நீதிமன்ற பணிகளுக்கு சென்றவர்கள், பணிமாறுதல் போக தற்போது 5 காவலர்களுடன் மற்றும் காவல் நிலையம் செயல்படுகிறது.

பேராவூரணி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதி 92 கிராமங்களை உள்ளடக்கியது. பல்வேறு பிரச்னைகளுக்காக காவல் நிலையத்துக்கு தினம்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வருகின்றனர். காவல் நிலையம் சென்றாலும் ஆளில்லை வந்து பார்க்கிறோம் என கூறி அனுப்பி விடுவதால் பொதுமக்கள் பிரச்சினை தீராத நிலை உள்ளது. கிராமங்களில் ஏற்படும் சிறு தகராறு குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படாததால் கலவரமாக மாறும் சூழல் ஏற்படுகிறது. இரவில் ரோந்து பணிகள் ஏதும் இல்லாததால் கடைவீதியில் ஒரே இரவில் மூன்று, நான்கு கடைகளில் திருட்டு நடக்கிறது.

பகல் நேரங்களில் வாகன சோதனை செய்யப்படாததால் சிறுவர்கள், இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் கடைவீதியில் மின்னல் வேகத்தில் சென்று சாலையில் செல்வோரை அச்சப்பட வைக்கின்றனர். இதுகுறித்து தஞ்சை தெற்கு மாவட்ட மக்கள் சட்ட உரிமைகள் கழக அமைப்பாளர் குஞ்சருளன் கூறியதாவது: பேராவூரணி காவல் நிலையத்தில் போதிய போலீசார் இல்லாததால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது. நகரம் மற்றும் கிராம பகுதிகளில் தொடர் திருட்டு நடக்கிறது. எனவே உடனடியாக குற்றப்பிரிவுக்கு தனி உதவி ஆய்வாளரையும், போலீசாரையும் நியமனம் செய்ய தஞ்சை சரக காவல்துறை துணை தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : police station ,Peravurani ,
× RELATED அருப்புக்கோட்டை காவல்நிலையத்தில்...