×

அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோயில் உண்டியல் திறப்பு

அறந்தாங்கி, அக்.23: அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோயிலில் உண்டியல் திறக்கப்பட்டு பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணப்பட்டது. இதில் ரூ.2.20 லட்சம் ரொக்கப்பணம், 66 கிராம் தங்கத்தை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோயில் இப்பகுதியில் பிரசித்தி பெற்ற கோயிலாகும். ஆண்டுதோறும் ஒருமாத காலம் திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக கோயில் திருப்பணி வேலைகள் நடைபெறுவதால், திருவிழா நடைபெறவில்லை. இந்நிலையில் வீரமாகாளியம்மன் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக உண்டியலில் செலுத்திய தொகை, கடந்த ஜனவரி மாதம் 21ம் தேதி திறந்து எடுக்கப்பட்டு வங்கியில் செலுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து மார்ச் மாதம் 20ம்தேதி கொரோனா பரவலால் கோயில் மூடப்பட்டு, கடந்த செப்டம்பர் 1ம் தேதி திறக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று வீரமாகாளியம்மன் கோயில் உண்டியல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சுரேஷ் தலைமை வகித்தார் .கோயில் செயல் அலுவலர் முத்துக்குமரன், ஆய்வாளர் கண்ணன் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டு, அதில் இருந்த பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய, பணம், நாணயங்கள், தங்கம், வௌ்ளி தனித்தனியாக பிரிக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதில் ரூ.2லட்சத்து, 22ஆயிரத்து, 885 ரொக்கப்பணமும், சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான 66 கிராம் தங்கம், சுமார் ரூ.15 ஆயிரம் மதிப்பிலான வௌ்ளியும் இருந்தன. உண்டியலில் இருந்த பணம், தங்கம், வௌ்ளி போன்றவற்றை அதிகாரிகள், வீரமாகாளியம்மன் கோயில் கணக்கில் வங்கியில் செலுத்தினர்.

Tags : Aranthangi Veeramakaliamman Temple Bill ,