×

குந்தாவில் சார்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும்

மஞ்சூர்,அக்.23: குந்தா பகுதியில் சார்பு நீதிமன்றம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நீலகிரி மாவட்டம் குந்தா மண்டல பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம் மஞ்சூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மண்டல தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்புசாரா பிரிவு தலைவர் பிரபு, மாவட்ட விவசாய அணி பொது செயலாளர் கமலகண்ணன், மண்டல பொருளாளர் சிவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக மாநில மகளிரணி துணை தலைவர் சபீதாபோஜன், மாவட்ட துணை தலைவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், நவம்பர் மாதம் நீலகிரி வருகை தரும் மாநில தலைவர் முருகனுக்கு குந்தா மண்டலத்தின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டது.

மேலும் குந்தா பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களை மேம்படுத்தி சுற்றுலா தலமாக அறிவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குந்தா பகுதியில் மின் மயானம் அமைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சார்பு நீதி மன்றம் அமைக்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை பேரூராட்சி பகுதிகளிலும் விரிவு படுத்த வேண்டும். மஞ்சூர் பகுதியில் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை அலுவலகம் அமைக்க வேண்டும். வட்டார வளர்ச்சி அலுவலகம் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கீழ்குந்தா பேரூராட்சிகுட்பட்ட அம்மக்கல் குடிநீர் தேக்கத்தை தூர்வாரி தடையற்ற குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். எமரால்டு கூட்டு குடிநீர் திட்டப்பணிகளை விரைந்து முடிப்பதோடு அப்பர்பவானி கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டு வந்து செயல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆரி, மண்டல துணை தலைவர்கள் பிரகாஷ், சூர்யதேவன், சரஸ்வதி, பிரவீணா, பாக்யம், மாலினி, ராதா உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Tags : Kunda ,
× RELATED குந்தா சுற்று வட்டார பகுதியில்...