×

வால்பாறை, மானாம்பள்ளி வனச்சரகத்தில் பழங்குடியினருக்கு சோலார் மின்விளக்கு தொகுப்பு வழங்கல்

வால்பாறை, அக். 23: வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வால்பாறை மற்றும் மானாம்பள்ளி வனச்சரகத்தில் உள்ள, பழங்குடியினர் கிராமங்களில் உள்ள குடும்பங்களுக்கு ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள சோலார் மின் விளக்கு தொகுப்புகள் வழங்கும் பணி நேற்று துவங்கியது. ஆனைமலை புலிகள் காப்பகதிற்கு உட்பட்ட பொள்ளாச்சி, வால்பாறை, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகத்தில் 17 வனக்கிராமங்கள் உள்ளன. இங்கு 400க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த சுமார் 2700க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். பழங்குடி கிராமங்களில் மின்சாரம் வசதி இன்றி மக்கள் தவித்து வந்தனர்.

இதையடுத்து, வனக்கிராமங்களுக்கு மின்வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பழங்குடி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதனடிப்படையில், வனத்துறை மற்றும் மின்வாரியம் சார்பில் வால்பாறை தாலுகாவில் உள்ள பழங்குடியின மக்கள் குடியிருப்புகளில் சோலார் மின் விளக்குகள் வழங்கும் பணி நேற்று தொடங்கியது. வால்பாறை கீழ்பூணாச்சி பழங்குடியினர் கிராமத்தில் மின்வாரிய செயற்பொறியாளர் ராம்பிரகாஷ் உத்திரவின்பேரில் உதவி பொறியாளர்கள் கார்த்திக், அரவிந்தன், துணை கள இயக்குநர் சேவியர் உத்திரவின்பேரில் வனவர் முனியாண்டி ஆகியோர் வழங்கினர். வால்பாறை வனச்சரகத்தில் வெள்ளிமுடி, கவர்கல், நெடுங்குன்றா, கீழ்பூணாச்சி ஆகிய வனக்கிராமங்களில் 118 குடும்பங்கள், மானாம்பள்ளி வனச்சரகத்தில் சின்கோனா, சங்கரன்குடி, உடும்பன்பாறை, பாலகினார், கல்லார்குடி, பரமன்கடவு ஆகிய வனக்கிராமங்களில் 139 குடும்பங்கள் என மொத்தம் 257 குடும்பங்களுக்கு சோலார் மின்வசதிக்கான கருவிகள் வழங்கப்பட உள்ளதாக வனத்துறை மற்றும் மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Valparai ,Manampalli Wildlife Sanctuary ,
× RELATED திருச்சியில் நவீன வசதிகளுடன் புதிய...