ஆயுதபூஜையை முன்னிட்டு சம்பங்கி பூ விலை உயர்வு

சத்தியமங்கலம், அக்.23:  ஆயுதபூஜையை முன்னிட்டு சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் சம்பங்கி பூ விலை உயர்ந்து கிலோ ரூ.120க்கு விற்கப்படுகிறது. சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளான சிக்கரசம்பாளையம், பெரியகுளம், புளியங்கோம்பை, அரியப்பம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பங்கி பயிரிடப்பட்டுள்ளது. இங்கு பறிக்கப்படும் சம்பங்கி பூக்கள் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கும், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. நவராத்திரி பண்டிகை தொடங்கியதால் கடந்த வாரம் முதல் சம்பங்கி பூ விலை மெதுவாக உயரத் துவங்கியது. நேற்று முன்தினம் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் சம்பங்கி கிலோ ரூ.80க்கு விற்பனையான நிலையில் நேற்று விலை உயர்ந்து ரூ.120க்கு விற்பனையானது. தொடர்ந்து நாளை மறுதினம் ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி பண்டிகை உள்ளதால் சம்பங்கி பூக்களின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories:

>