×

கடைகளில் விலை குறையும் தினசரி முட்டை விலை நிர்ணயத்தால் யாருக்கு பாதிப்பு? என்இசிசி அறிவிப்புக்கு பண்ணையாளர்கள் வரவேற்பு

நாமக்கல், அக்.22: நாமக்கல் மண்டலத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில் உற்பத்தியாகும் பெரிய முட்டைக்கு (52 கிராம்), கடந்த 40 ஆண்டுக்கு மேலாக என்இசிசி விலை நிர்ணயம் செய்து வருகிறது. இந்த விலையை அடிப்படையாக வைத்தே, வியாபாரிகள் முட்டை வாங்கி செல்கின்றனர். சில்லறை கடைகளில் முட்டை விற்பனையும் என்சிசி விலையை வைத்து தான் நடக்கிறது. கடந்த 2000ம் ஆண்டு வரை என்இசிசி நிர்ணயம் செய்யும் விலைக்கே பண்ணைகளில் வியாபாரிகள் முட்டையை வாங்கி சென்றனர். அதற்கு பிறகு பல பண்ணையாளர்கள், நேரடி வியாபாரியாக மாறினார்கள். முட்டை விற்பனை கம்பெனியில் வேலை செய்த பலரும் தொழில் நுனுக்கங்களை கற்று கொண்டு, தனி வியாபாரியாக மாறினார்கள். இதனால், முட்டைக்கு மைனஸ் விலை என ஒன்றை கண்டுபிடித்தனர்.

நாமக்கல் மண்டலத்தை விட, மற்ற மண்டலங்களில் முட்டை விலை குறைவாக இருந்தால், அந்த விலையை மைனஸ் விலை என வியாபாரிகள் அறிவித்து, நாமக்கல் பண்ணைகளில் விலையை குறைத்து வாங்க தொடங்கினர். வெளி உலகம் அறியாத பண்ணையாளர்களும், தொழில் போட்டியால் குறைந்த விலைக்கு வியாபாரிகளிடம் முட்டையை விற்பனை செய்ய தொடங்கினர். இந்த மைனஸ் விலை காலப்போக்கில் அபார வளர்ச்சி அடைந்து, என்இசிசியால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு சென்றுவிட்டது. மைனஸ் விலையின் மூலம் என்இசிசி நிர்ணயம் செய்யும் விலைக்கும், கடைகளில் விற்பனை செய்யப்படும் முட்டை விலைக்கும் இடையே ₹1 வரை வித்தியாசம் இருக்கிறது. மைனஸ் விலைக்கு முடிவு கட்டும் வகையில், நாமக்கல் மண்டல என்இசிசி சேர்மன் டாக்டர் செல்வராஜ், நாளை முதல் (23ம்தேதி) தினமும் மைனஸ் இல்லாத முட்டை விலை நிர்ணயம் செய்யப்படும் என அறிவித்துள்ளார்.

இதுகுறித்து, தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம் கூறியதாவது:
இந்தியாவில் உள்ள மற்ற மண்டலங்களில், என்இசிசி தினமும் முட்டை விலையை நிர்ணயம் செய்கிறது. அதே நடைமுறை நாமக்கல்லிலும் வருவதன் மூலம், மக்களுக்கு குறைந்த விலையில் முட்டை கிடைக்கும். இதன் மூலம் பண்ணையாளர்களுக்கும், வியாபாரிகளுக்கும் எந்த பாதிப்பும் ஏற்பட போவதில்லை. முட்டைகளை பதுக்கிவைத்து விற்பனை செய்யும் வியாபாரிகள், மற்ற மாநிலங்களில் முட்டை விலை குறைவை காரணம் காட்டி, நாமக்கல் பண்ணைகளில் மைனஸ் விலையை உயர்த்தும் நபர்களுக்கு தான், பாதிப்பை ஏற்படுத்தும். அவர்களுக்கு தினசரி முட்டை விலை நிர்ணயம், தொழிலில் நேர்மையை கற்று கொடுக்கும்.

பண்ணைகளில் ஒரு வியாபாரி மொத்தமாக பணம் கொடுத்து முட்டை வாங்கும் போது, என்இசிசி விலையில் இருந்து ஒரு முட்டைக்கு 5 காசு குறைவாக தான் பண்ணையாளர்கள் விற்பனை செய்கிறார்கள். நாமக்கல்லில் இருந்து தமிழகம் முழுவதும் முட்டையை கொண்டு செல்ல ஒரு முட்டைக்கு 20 காசு தான் போக்குவரத்துக்கு செலவாகும். தினமும் முட்டை கொள்முதல் செய்யும் வியாபாரிகளுக்கு, தினசரி விலை நிர்ணயத்தால் பாதிப்பு ஏற்படாது. விலையும் தினமும் அதிகம் மாறுபடாது. இன்று ஒரு விலைக்கு முட்டையை வாங்கி, நாளைக்கு விற்பனை செய்யும் போது, வேறு விலை சில நாட்களில் வரும் போது வியாபாரிகளுக்கு பாதிப்பு வந்தாலும், அதே வாரத்தில் விலை உயரும் போது, பாதிப்பை சரி கட்டிவிடமுடியும். ஆனால், இஷ்டத்துக்கு மைனஸ் விலையை வியாபாரிகள் போட்டி போட்டு உயர்த்துவதன் மூலம், கடைகளில் சில்லறை விலை உயர்ந்து, விற்பனை சரிகிறது. இதனால் பண்ணையாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

நாமக்கல்லில் நேற்று முன்தினம் வரை, பண்ணைகளில் என்இசிசி விலையில் இருந்து 50 முதல் 60 காசு வரை மைனஸ் விலை போனது. தினசரி முட்டை விலை நிர்ணயம் என என்இசிசி அறிவித்தவுடன், நேற்று மைனஸ் விலை 25 காசாக குறைந்துவிட்டது. இது எப்படி என்பது வியாபாரிகளுக்கு தான் தெரியும். எனவே, தினசரி விலை நிர்ணயம் சிறிய மற்றும் பெரிய பண்ணையாளர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் பயனுடையதாக இருக்கும். இவ்வாறு வாங்கிலி சுப்பிரமணியம் தெரிவித்தார்.

Tags : shops ,announcement ,NECC ,
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி