×

தமிழகத்தில் தற்போது பள்ளிகள் திறக்க சாத்திய கூறுகள் இல்லை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்


உளுந்தூர்பேட்டை, அக். 22: தமிழகத்தில் தற்போது பள்ளிகளை திறக்க சாத்திய கூறுகள் இல்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே நகர் விநாயகா கலைக் கல்லூரி வளாகத்தில் தமிழக பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், அரியலூர் மாவட்டங்களை சேர்ந்த 205 மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.  மாவட்ட வருவாய் அலுவலர் சங்கீதா தலைமை தாங்கினார். எம்எல்ஏக்கள் உளுந்தூர்பேட்டை குமரகுரு, கள்ளக்குறிச்சி பிரபு முன்னிலை வகித்தனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி வரவேற்றார். மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் கருப்பசாமி துவக்க உரையாற்றினார்.  

தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டு 205 மெட்ரிக் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணையை வழங்கி பேசினார். இதனை தொடர்ந்து அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 7 ஆயிரம் ஸ்மார்ட் கிளாஸ்கள் துவங்கப்பட உள்ளன. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கல்வி சேனல் துவங்கப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் சிறப்பான முறையில் அளிக்கப்பட்டு வருகிறது. சிறப்பு ஆசிரியர் தேர்வு பெற்றவர்கள் தொடர்ந்து நீதிமன்றத்திற்கு செல்வதாலும் வழக்கு நிலுவையில் உள்ளதாலும் பணி நியமனம் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்த  மாத இறுதிக்குள் நீட் தேர்வுக்கான மாணவர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு அதன் பிறகு இலவசமாக நீட் தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் தற்போது பள்ளிகள் திறக்க சாத்திய கூறுகள் இல்லை. இது குறித்து தமிழக முதல்வர் அனைத்து துறை அதிகாரிகளிடம் கலந்து ஆலோசனை செய்து அதன் பிறகு பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும், என்றார்.

ஏழரை சதவிகிதம் இட ஒதுக்கீட்டுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்க காலதாமதம் செய்து வருவதற்கான காரணம் குறித்து கேட்ட போது அமைச்சர் செங்கோட்டையன் எந்த பதிலும் அளிக்கவில்லை. இந்நிகழ்ச்சியில் விநாயகா கல்வி குழும சேர்மன் நமச்சிவாயம், அதிமுக ஒன்றிய செயலாளர்கள் சந்திரன், பழனிவேல், மாவட்ட கல்வி அலுவலர்கள் கலைச்செல்வன், மணிமொழி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags : schools ,Senkottayan ,Tamil Nadu ,
× RELATED டிசம்பர் இறுதி வரை பள்ளிகளை திறக்க கூடாது: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்