மரக்காணம் அருகே பரபரப்பு மாயமான சிறுவன் அடித்து கொலை வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை

மரக்காணம், அக். 22: மரக்காணம் அருகே மாயமான சிறுவன் அடித்து கொலை செய்யப்பட்டான். இது சம்பந்தமாக வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே நொச்சிக்குப்பம் மீனவர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (40). இவரது மகன் தேவன்ராஜ் (13). இவர் 8ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். கடந்த 10ம் தேதி வீட்டில் இருந்து வெளியில் சென்ற தேவன்ராஜ் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. பின்னர் இதுகுறித்து அவரது தந்தை கோவிந்தராஜ் மரக்காணம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தேவன்ராஜை தேடி வந்தனர்.

தொடர்ந்து தேவன்ராஜ் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது அது சுவிட்ச்ஆப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து தேவன்ராஜ் செல்போன் எண்ணுக்கு கடைசியாக யார் பேசியது என சோதனை செய்தபோது அதே கிராமத்தை சேர்ந்த அபினேஷ் (20) என்பது தெரியவந்தது.அதன்பேரில் அபினேஷை பிடித்து போலீசார் ரகசிய விசாரணை நடத்தினர். அதில் அபினேஷ் சம்பவத்தன்று தேவன்ராஜை கொலை செய்து நொச்சிக்குப்பம் அருகே உள்ள சுடுகாடு பகுதியில் உள்ள சவுக்கு தோப்பில் புதைத்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சம்பந்தப்பட்ட இடத்தை பார்வையிட்டு உறுதி செய்தனர். பின்னர் இதுகுறித்து போலீசார் விழுப்புரம் மாஜிஸ்திரேட், மரக்காணம் வட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய்த்துறை அதகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் தற்போது கனமழை பெய்து வருவதால் அதிகாரிகள் வருவது தாமதமாகலாம் என கூறப்படுகிறது.

 இதனால் இரவு அல்லது நாளை காலை சடலத்தை தோண்டி பிரேத பரிசோதனை செய்யப்படலாம் என கூறப்படுகிறது. மேலும் தேவன்ராஜை கொலை செய்ததற்கான காரணம் குறித்து அபினேஷிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவன் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் மரக்காணத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>