×

வீரவணக்க நாள் அனுசரிப்பு நினைவுத்தூணுக்கு அஞ்சலி

தேனி, அக்.22.: தேனியில் வீரமரணமடைந்த போலீசாருக்கான வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. வீர மரணம் அடைந்த காவலர்களின் தியாகங்களை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்.21ம் தேதி காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் நேற்று தேனி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள காவலர்களின் நினைவுத்தூண் இடத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரியம் பல்லவி பல்தேவ் முன்னிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் சரண் தேஜஸ்வி தலைமையில் மலர்வளையம் வைத்து 66 குண்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தேனி மாவட்டத்தில் பணியின்போது வீர மரணம் அடைந்த 5 காவலர்களை நினைவு கூரும் வகையில் நினைவுத்தூணில் அவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திறந்து வைத்தார். வீரமரணமடைந்த காவலர்களின் குடும்பத்தாருடன் இணைந்து மரக்கன்றுகளை நடவு செய்தனர். மேலும் நிகழ்ச்சியில் வீரமரணமடைந்த காவலர்களுக்காக இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்டத்திலுள்ள கோட்டாட்சியர்கள், பயிற்சி ஆட்சியர், கூடுதல் ஏடிஎஸ்பிக்கள், டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்கள், போலீசார்கள், ஹோம் கார்டுகள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள், உயிர் நீத்த காவலர்களின் குடும்பத்தார்கள் உட்பட பலர் வீரமரணமடைந்த காவலர்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்தனர். நிகழ்ச்சியில் அனைவரும் கருப்பு பேட்ச் அணிந்து கலந்துகொண்டனர்.

Tags : Veeravanaka Day Adjustable Memorial ,
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு