குழாய் உடைப்பால் வீணாகும் காவிரி குடிநீர் மெத்தனத்தில் குடிநீர் வாரியம்

சாயல்குடி, அக்.22:  கடலாடி அருகே மலட்டாறு விலக்குரோடு சாலையின் நடுவில் காவிரி கூட்டு குடிநீர் உடைந்து தண்ணீர் ஓடி வருவதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன், தண்ணீர் வீணாகி வருகிறது. ரூ.616 கோடி மதிப்பீட்டில் காவிரி, ராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்டம் கடந்த 2009-10ம் ஆண்டுகளில் கொண்டுவரப்பட்டது. திருச்சி கொள்ளிடம் ஆற்றில் ராட்சத கிணறுகள் அமைக்கப்பட்டு, அதன் மூலம் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் மற்றும் சிவகங்கை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. காவிரி கூட்டு குடிநீரை மாவட்டத்திலுள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடலாடி-சாயல்குடி சாலை, சாயல்குடி-ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலை சந்திப்புள்ள மலட்டாறு விலக்குரோடு பஸ் ஸ்டாப் அருகே குழாயில் உடைப்பு ஏற்பட்டு, சாலை பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வீணாகி வருகிறது.

இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன் இரவு நேரத்தில் விபத்துகளும் ஏற்பட்டு வருவதாக வாகன ஓட்டிகள் புகார் கூறுகின்றனர். மேலும் கடலாடி, சாயல்குடி பகுதியிலுள்ள  கிராமங்களுக்கு தண்ணீர் செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது.

இதனால் கிராம மக்கள் குடிதண்ணீருக்கு, சாலை பகுதியில், உடைப்புகளிலிருந்து கசியும் நீரை மணிக்கணக்கில் காத்து கிடந்து, தள்ளுவண்டியில் வைத்து, விபத்து அச்சத்துடன் தண்ணீர் எடுத்து பயன்படுத்தும் நிலை இருப்பதாக புகார் கூறுகின்றனர். எனவே காவிரி கூட்டு குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்புகளை சீரமைத்து அனைத்து கிராமங்களுக்கும் சீரான குடிதண்ணீர் விநியோகம் செய்ய தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories:

More
>