×

கடைசி நபரும் டிஸ்சார்ஜ் பழநி ஜிஹெச்சில் கொரோனா வார்டு மூடல்

பழநி, அக். 22: கொரோனா பாதிப்பு குறைவு, கடைசி நபரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதன் எதிரொலியாக பழநி அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வந்த கொரோனா வார்டு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 6 மாத காலமாக கொரோனா தொற்று பரவி வருகிறது. பழநி பகுதியில் முதன்முதலாக கடந்த ஏப்ரல் மாதம் 1ம் தேதி 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதுமுதல் தற்போது வரை பழநி,  ஒட்டன்சத்திரம் பகுதியில் சுமார் 1700 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தற்போது வரை பழநி பகுதியில் சுமார் 14 ஆயிரத்து 300 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆரம்ப காலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் கரூரில் உள்ள மருத்துவக்கல்லூரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

அதன்பின்பு,  திண்டுக்கல் அரசு மருத்துவமனையிலும் கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பழநி பகுதியில் பாதிப்பு அதிகரிப்பின் காரணமாக கடந்த ஜூலை மாதத்தில் இருந்து அரசு மருத்துவமனையில் 90 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. தவிர, பழநியாண்டவர் கல்லூரியிலும் 65 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டன. பாதிப்பு குறைவின் காரணமாக பழநியாண்டவர் கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வந்த மையம் கடந்த மாதம் மூடப்பட்டது. இந்நிலையில் தற்போது பழநி அரசு மருத்துவமனையிலும் புதிய கொரோனா நோயாளிகள் யாரும் இல்லை.

கடைசியாக இருந்த ஒருவரும் நேற்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். இதனால் பழநி அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வந்த கொரோனா சிகிச்சை மையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. பழநி பகுதியில் கொரோனா பாதிப்பிற்கு ஆளானவர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவர் என்றும், கொரோனா பாதிப்பு அதிகமாகும்பட்சத்தில் பழநி அரசு மருத்துவமனையில் மீண்டும் கொரோனா சிகிச்சை மையம் ஏற்படுத்தப்படுமென மருத்துவமனை அலுவலர்கள் தெரிவித்தனர்.

Tags : Corona ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...