×

தமிழக அரசுக்கு வலியுறுத்தல் 2 மாதமாக அதிகாரிகள் அலட்சியம் பஞ்சனூரணி ஏரியில் ஆக்கிரமிப்பை அதிரடியாக அகற்றிய விவசாயிகள்

தஞ்சை, அக். 22: பேச்சுவார்த்தையில் ஒப்பு கொண்டவாறு 2 மாதமாகியும் அதிகாரிகள் அலட்சியம் செய்ததால் பஞ்சனூரணி ஏரியில் இருந்த ஆக்கிரமிப்பை விவசாயிகள், பொதுமக்கள் இணைந்து அகற்றினர். தஞ்சை மாவட்டம் பூதலூர் வட்டம் செங்கிப்பட்டி ஊராட்சி வன்னியம்பட்டி கிராமத்தில் உள்ள பஞ்சனூரணி ஏரி, குளம், நீர் வரத்துவாரி மற்றும் போக்குவரத்தை தனிநபர்கள் ஆக்கிரமித்து அடைத்து வைத்திருப்பதை கண்டித்து ஆக்கிரமிப்பை அகற்றும் போராட்டம் கடந்த 19ம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வன்னியம்பட்டி கிளை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

வன்னியம்பட்டியில பல ஆண்டுகளாக விவசாயத்துக்கு பயன்பட்டு வரும் பஞ்சனூரணி ஏரிக்கு தண்ணீர் செல்லும் வரத்துவாரி, பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்த பொதுப்பாதையை அரசு பணியில் உள்ள பொறியாளர் மதியழகன் குடும்பத்தினர் மற்றும் செல்வராஜ் ஆகியோர் இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதை அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் ஆக்கிரமிப்பை அகற்றாததால் விவசாயிகள் வாழ்வாதாரத்தை மீட்க தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் கிராம மக்கள் சார்பில் ஆக்கிரமிப்பை அகற்றும் அறவழி போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக பூதலூர் தாசில்தார் அலுவலகத்தில் கடந்த 18ம் தேதி பேச்சுவார்த்தை நடந்தது. அதில் 15 நாட்களுக்குள் ஆக்கிரமிப்பு அகற்றி பாசன வாய்க்கால் மற்றும் சாலை வழங்கப்படுமென முடிவெடுத்து அறிவிக்கப்பட்டது. ஆனால் 2 மாதங்கள் கடந்தும் ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை.

தற்போது இப்பகுதியில் நல்ல மழை பெய்த போதும் நீர்வரத்து பாதை அடைத்து வைத்துள்ளதால் பஞ்சனூரணி ஏரிக்கு தண்ணீர் வராமல் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிப்படைந்தனர். இதனால் இந்தாண்டு விவசாயம் செய்தே ஆக வேண்டும் என்ற நிலையில் தண்ணீர் வரும் வாரி ஆக்கிரமிப்பை விவசாயிகளே ஒன்று சேர்ந்து அகற்றி ஏரிக்கு தண்ணீர் வருவதற்கு ஏற்பாடு செய்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் தமிழ்செல்வி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பூதலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பாஸ்கர், தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவர் தமிழரசன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் காமராஜ், மாதர் சங்க ஒன்றிய தலைவர் மலர்க்கொடி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ரமேஷ், வைத்தியநாதசாமி, சித்திரவேல், சுபாஷ் சந்திரபோஸ், தங்கமணி, சரவணன், சிவன்ராஜ் மற்றும் விவசாயிகள், வன்னியம்பட்டி கிராம மக்கள் இணைந்து ஆக்கிரமிப்பு அகற்றும் அறப்போராட்டத்தில் பங்கேற்றனர். ஆக்கிரமிப்பு அகற்றிய பின்னர் ஏரிக்கு தடையின்றி தண்ணீர் சென்றது. இதனால் 50 ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி ஏற்பட்டு விவசாயிகளின் பல ஆண்டு பிரச்னை தீர்க்கப்பட்டது.

Tags : Government of Tamil Nadu ,Panchanurani Lake ,
× RELATED கனமழையில் இருந்து பாதுகாக்க...