×

பெரம்பலூர் மாவட்டத்தில் குறுகியகால இணையவழி பயிற்சிக்கு வேலைவாய்ப்பற்றோர் விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூர், அக். 22: பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் அமெரிக்க கோர்ஸரா நிறுவனம் இணைந்து நடத்தும் குறுகிய கால இணையவழி பயிற்சிக்கு வேலைவாய்ப்பற்றோர் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகமானது, அமெரிக்க நிறுவனமான கோர்ஸரா நிறுவனத்துடன் வேலைவாய்ப்பற்ற 50,000 பேருக்கு இணையவழியில் இலவசமாக குறுகிய கால பயிற்சி அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. கோர்ஸெரா நிறுவனம் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், கூகுள், ஐபிஎம் மற்றும் பிற அரசு நிறுவனங்களுடன் இணைந்து பொறியியல், இயந்திர கற்றல், கணிதம், வணிகம், கணினி அறிவியல், டிஜிட்டல் சந்தைப்படுத்துதல், மருத்துவம், உயிரியல், சமூக அறிவியல் மற்றும் பிற பாடங்களில் இணையவழியில் வகுப்புகளை நடத்தி சான்றிதழ் படிப்புகள் மற்றும் பட்டப் படிப்புகளை வழங்குகிறது.

உலகின் முன்னணி பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களில் உள்ள பயிற்றுனர்களை கொண்டு தரமான பாட குறிப்புகள் மற்றும் காணொளி பாட தொகுப்புகளுடன் பயிற்றுவிக்கப்படுகிறது. பயிற்சி முடிந்தவுடன் இணையம் வழியாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி வேலைவாய்ப்பும் அளிக்கப்படுகிறது. இப்பயிற்சியை பெற விரும்புபவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவராகவும், 18 வயது பூர்த்தியானவராகவும், வேலைவாய்ப்பற்றவராகவும் இருக்க வேண்டும். மேலும் இப்பயிற்சியை பெற ஆதார் எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண் ஆகிய விவரங்களுடன் வருகிற 31ம் தேதிக்குள் tnskill.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : district ,Perambalur ,
× RELATED தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றி...