×

ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள்

பெ.நா.பாளையம்,அக்.22:  கோவை துடியலூரில் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் 3 காட்டு யானைகள் புகுந்தது. இதையடுத்து வனத்துறையினர் பொதுமக்கள் வீட்டை விட்டு இரவில் வெளியேற வேண்டாம் என எச்சரித்துள்ளனர்.
கோவை மாவட்ட எல்லையான மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வசிக்கின்றன. அவைகளில் சில உணவு தேடி அவ்வப்போது மலை அடிவாரப்பகுதிகளில் வெட்டப்பட்டுள்ள அகழிகளைத் தாண்டி விளை நிலங்கள் மற்றும் குடியிருப்புக்குள் வந்து விடுகின்றது.

இதேபோல் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் வனத்தை விட்டு வெளியேறிய 3 யானைகள் துடியலூர் அருகே உள்ள தொப்பம்பட்டி, கதிர்நாயக்கன்பாளையம் ஸ்ரீலட்சுமி நகர் பேஸ் 3 பகுதிக்குள் நுழைந்தன. உணவு,தண்ணீர் தேடி குடியிருப்புக்குள் நுழைந்த யானைகள் தெருக்களில் உலா வரும் காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடி கேமராவில் பதிவானது. நள்ளிரவில் மிகவும் சர்வ சாதரணமாக 3 காட்டு யானைகள் தெருக்கள் வழியே நடந்து செல்லும் காட்சிகள், அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது.இந்நிலையில் யானைகள் ஊருக்குள் புகுந்திருப்பதால், இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே நடமாடும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலும் அத்தியாவசிய தேவைகளின்றி பொதுமக்கள் இரவில் வீட்டை விட்டு வெளியேறக் கூடாது என  வனத்துறை எச்சரித்துள்ளனர்.

Tags : city ,
× RELATED காட்டு யானைகள் தாக்கி குடியிருப்புகள் சேதம்