×

கஞ்சா வேட்டைக்கு சென்ற நாமக்கல் எஸ்ஐ திடீர் மாற்றம்

நாமக்கல், அக். 21: புதுக்கோட்டை மாவட்டம் வரை சென்று கஞ்சா வியாபாரிகளை கைது செய்து, கஞ்சா மூட்டைகளை பறிமுதல் செய்த நாமக்கல் எஸ்ஐ., திருச்செங்கோட்டுக்கு இடமாறுதல் செய்யப்பட்டார். நாமக்கல் போலீஸ் ஸ்டேசனில் எஸ்ஐயாக பூபதி(44) என்பவர், கடந்த ஓராண்டாக பணியாற்றி வந்தார். கடந்த 4 மாதமாக இவர், கஞ்சா வியாபாரிகளை பிடிக்கும் எஸ்பி தனிப்படையில் பணியாற்றி வந்தார். புதுக்கோட்டை மாவட்டம் வரை சென்று, நாமக்கல் கஞ்சா வியாபாரிகளுடன் தெடர்புடைய நபரை கைது செய்து, கஞ்சா மூட்டைகளை பறிமுதல் செய்தார். எஸ்பி சக்திகணேசனின் நம்பிக்கைக்குரிய எஸ்ஐயாக பூபதி மாறினார்.

இதனால் நாமக்கல் போலீஸ் ஸ்டேசன் பக்கம் கூட வராமல், தொடர்ந்து கஞ்சா வியாபாரிகளின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, பூபதியை மாவட்ட எஸ்பி சக்திகணேசன் திடீரென திருச்செங்கோடு போலீஸ் ஸ்டேசனுக்கு இடமாறுதல் செய்து உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று காலை பூபதி நாமக்கல்லில் இருந்து ரிலீவாகி, திருச்செங்கோட்டில் பணியில் சேர்ந்தார். எஸ்ஐ பூபதி நாமக்கல் டவுனில் சட்ட ஒழுங்கு எஸ்ஐயாக சிறப்பாக பணியாற்றி, முந்தைய எஸ்பி அருளரசுவிடம் பாராட்டு சான்றிதழ் பெற்றார். நகரில் நிலவி வந்த ஆட்டோ டிரைவர்கள் பிரச்னையில் அதிரடி முடிவு எடுத்து தீர்த்து வைத்தார். கஞ்சா வியாபாரிகளை பிடிக்கும் தனிப்படையில் பணியாற்றி வந்த பூபதி, புதுக்கோட்டை சென்று கஞ்சா வியாபாரிகளை கைது செய்தது மற்றும் பிடிபட்ட கஞ்சா வாகனங்களில், சில வாகனங்களை விடுவித்தது தொடர்பான சர்ச்சையில் சிக்கி, தற்போது இடமாறுதலில் சென்றுள்ளதாக உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : cannabis hunt ,
× RELATED ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0: 535 கிலோ கஞ்சா பறிமுதல்