×

சரக்குடன் பொழுதுபோக்கும் குடிமகன்கள் டாஸ்மாக் பாராக மாறிய கண்மாய் போலீஸ் ரோந்து வருமா?

தேனி, அக்.21: தேனி நகரில் உள்ள மீறுசமுத்திரம் கண்மாயில் இளைஞர்கள் மது அருந்துவதால் டாஸ்மாக் பார் போல் மாறி வருகிறது. இதனை தடுக்க போலீசார் ரோந்து வர வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர். தேனி நகரின் மத்தியில் தாலுகா அலுவலகம் உள்ளது. இதனருகே மீறுசமுத்திரம் கண்மாய் உள்ளது. கண்மாய்க்கு வீரப்ப அய்யனார் கோயில் மலை பகுதியில் இருந்து வரும் ஆற்றிலிருந்து நீர் வரத்து உள்ளது. கண்மாயில் வருடம் முழுவதும் பரவலாக நீர் நிரம்பியிருக்கும். இதனால் இக்கண்மாய்க்கு பல்வேறு வகையான பறவைகள் வந்து தங்குகின்றன. கண்மாயில் நிரம்பியிருக்கும் நீரினால் அருகே உள்ள தேனி நகர மக்களுக்கு நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வந்தது.  

இந்த கண்மாயின் கரையில் சுற்றுலாத்துறை மூலம் நடைபாதை அமைத்து மாலை நேரங்களில் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள வசதி செய்து தர வேண்டுமென நகர மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் கண்மாயில் ஆண்டுமுழுவதும் நீர் நிரம்பி இருப்பதால் படகு சவாரி செய்யவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தேனி நகர மக்கள் மற்றும் சமூக அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கான ஆரம்பகட்ட பணிகளை செய்வதாக கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பே நகராட்சி கூறியது.

ஆனால் எந்த ஒரு பணியும் நடக்கவில்லை. இந்நிலையில் இந்த கண்மாய் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் காலை முதல் இரவு வரை மதுபானங்களை வாங்கும் குடிமகன்கள் குழு குழுவாக கண்மாய்க் கரைக்கு வந்து ஆங்காங்கே அமர்ந்து மது அருந்துகின்றனர். மது அருந்திவிட்டு காலி பாட்டில்களை ஆங்காங்கே வீசி செல்கின்றனர்.. இதனால் கண்மாய் பகுதியில் எங்கு பார்த்தாலும் மது பாட்டிலாக கிடக்கிறது. சுகாதாரமற்ற நிலை அதிகரித்து வருகிறது. இதனால் இந்த கண்மாய் வழியாக விவசாய நிலங்களுக்கு செல்பவர்கள் அச்சத்துடனேயே செல்ல வேண்டியுள்ளது. எனவே காவல்துறை நிர்வாகம் மீறு சமுத்திரம் கண்மாய்க்கு அடிக்கடி ரோந்து வந்து மது அருந்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். விரைவில் மாவட்ட நிர்வாகம் கண்மாயில் பொதுமக்களுக்கான நடைபயிற்சி மற்றும் சிறுவர் பூங்கா அமைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளது.

Tags : citizens ,area ,Tasmag ,
× RELATED துபாய் மழை, வெள்ளம்: பாதிக்கப்பட்ட...