தேனி, அக்.21: தேனி புது பஸ் நிலையத்திலிருந்து கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையில் வாகனங்கள் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளதால் அடிக்கடி டிராபிக் ஏற்படுகிறது. தேனி புதிய பஸ் நிலையத்தில் இருந்து கிழக்கு திசையில் திட்ட சாலை உள்ளது. இச்சாலை வழியாக கலெக்டர் அலுவலகம், மாவட்ட போலீஸ் எஸ்பி அலுவலகம், ஐடிஐ, அரசு வேலைவாய்ப்பு அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம், மாவட்ட விளையாட்டு மைதானம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை அலுவலகங்களுக்கு செல்ல முடியும். இச்சாலையில் உள்ள ஒரு தனியார் கட்டிடத்திற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சார்பதிவாளர் அலுவலகம் வந்தது.
இதனையடுத்து அலுவலகம் அருகே பத்திர எழுத்தாளர் அலுவலகங்கள், ஓட்டல்கள், பெட்டிக்கடைகள் என வணிகம் சார்ந்த கடைகள் அதிகரித்துள்ளன. பதிவாளர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் தங்கள் இருசக்கர வாகனங்களை சாலையின் இருபுறமும் நினைத்த இடத்தில் நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் சாலை வழியாக கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு செல்லக் கூடியவர்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதியுற்று வருகின்றனர். எனவே தேனி நகர் போக்குவரத்து காவல்துறையினர் அவ்வப்போது சாலைக்கு வந்து போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள வாகனங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.