×

அனைத்து பள்ளி ஆசிரியர்கள் இணையவழி பயிற்சியில் கட்டாயம் பங்கேற்க வேண்டும்


புதுக்கோட்டை,அக்.21: புதுக்கோட்டையில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளி,சுயநிதிப் பள்ளி ஆசிரியர்கள் இணைய வழியில் நடைபெறும் நிஷ்தா பயிற்சியில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி பேசினார். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் சார்பில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் உள்ள தேர்வுக் கூட அரங்கில் மாவ ட்ட,வட்டார கல்விஅலுவலர்களுக்கு நிஷ்தா பயிற்சிக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி பேசுகையில், 2019-2020ம் கல்வி ஆண்டில் 1 முதல் 8 வகுப்புகளை கையாளும் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு நிஷ்தா பயிற்சி அளிக்கப்பட்டது.அப்பயிற்சி வெற்றி பெற்றதனால் தொடர்ச்சியாக இக்கல்வியாண்டில் இணையவழியாக கட்டணமில்லா நிஷ்தா பயிற்சியானது பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கி வரும் அனைத்து அரசு ,அரசு உதவி பெறும் பள்ளி,மெட்ரிக்,நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளில் 1 முதல் 8 வகுப்புகளை கையாளும் ஆசிரியர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இப்பயிற்சியில் பல்வேறு செயல்பாடுகள் ,காணொலிகள் ,வினாடி வினா இணைக்கப்பட்டு புதிய கல்விக்கொள்கை பரிந்துரைகளின் அடிப்படையில் 18 பாடநெறிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.இதில் புதியதாக கோவிட் 19 நடப்பு சூழ்நிலையினை பள்ளிக்கல்வியில் எதிர்கொள்ள வேண்டிய சவால்களை பற்றி ஒரு பாடநெறி இணைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இப்பயிற்சியில் கலந்து கொள்ளாத 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்புகளை கையாளும் அரசு பள்ளி ஆசிரியர்கள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும்.கடந்த ஆண்டு பயிற்சி மேற்கொண்ட 1 முதல் 8 வகுப்புகளை கையாளும் ஆசிரியர்கள் தங்கள் பணி மேம்பாட்டிற்காக பங்கேற்கலாம்.அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும்.

எனவே தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களில் கடந்தாண்டு பயிற்சி பெறாத ஆசிரியர்களை கண்டிப்பாக இப்பயிற்சியில் கலந்து கொள்வதை உறுதி செய்ய வேண்டும்.மாநில பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செய்யப்பட்டுவரும் அனைத்து சுயநிதிப் பள்ளிகளில் 1 முதல் 8 வகுப்புகளை கையாளும் அனைத்து ஆசிரியர்களும் இணைய வழியில் நடைபெறும் நிஷ்தா பயிற்சியில் பங்கு பெற வேண்டும்.இதனை அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என பேசினார்.கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் ராஜேந்திரன்,அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலர் திராவிடச் செல்வம்,இலுப்பூர் மாவட்டக் கல்வி அலுவலர் சண்முகநாதன், புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் ரவிச்சந்திரன், மற்றும் அனைத்து வட்டார கல்வி அலுவலர்கள்,வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags : school teachers ,
× RELATED அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு...