×

குறுகிய சாலையால் லாரி செல்ல முடியவில்லை பழைய பீரங்கியை வெலிங்டன் ராணுவ முகாமிற்கு கொண்டு செல்வதில் சிக்கல்

கூடலூர், அக்.21:  குன்னூர் வெலிங்டன் ராணுவ முகாமிற்கு பழைய பீரங்கியை ஏற்றி வந்த லாரி குறுகிய மலைச் சாைலயால் கூடலூர் அருகே நடுவழியில் நின்றது. சிறிய லாரிக்கு பீரங்கியை மாற்றி கொண்டு செல்ல ராணுவத்தின் முடிவு செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் இருந்து பழைய பீரங்கி ஒன்றை வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி மையத்திற்கு கொண்டு ெசல்ல ஏற்பாடு நடந்தது. ராணுவ மையத்தில் பயிற்சி பெறும் இளம் ராணுவத்தினருக்கு பழங்கால பீரங்கிகளின் பயன்பாடு குறித்து தெரிந்து கொள்வதற்காக இந்த பீரங்கி கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டது.

கடந்த 1960 முதல் 70ம் ஆண்டு வரையான கால கட்டத்தில் இந்தியா-சீனா மற்றும் பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரில் இந்த பீரங்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 35 டன் எடை உள்ள இந்த பீரங்கியை ஏற்றிய கனரக லாரி சில தினங்கள் முன் மகாராஷ்டிராவிலிருந்து புறப்பட்டது. இந்த லாரி சுமார் 40 அடி நீளம் உள்ளது. இந்த லாரி நேற்று முன்தினம் மாலை நீலகிரி மாவட்டம் கூடலூர் வந்தடைந்தது. மேல்கூடலூர் பகுதியில் உள்ள சிறிய வளைவான மலைச் சாலையில் நகர முடியாமல் நின்றுவிட்டது. பின்னர் இரவு 11 மணியளவில் அங்கிருந்து மெதுவாக நகர்ந்து சென்று சில்வர் கிளவுட் பகுதியில் நிறுத்தப்பட்டது.

இந்த லாரி நேற்று காலை புறப்படும் என எதிர்பார்த்த நிலையில் மலைப்பாதையில் வளைவான பகுதிகளில் ஓட்டிச்செல்ல அனுபவமில்லாத டிரைவர் லாரியை இயக்க முடியாது என மறுத்து விட்டார். இதையடுத்து குன்னூரில் இருந்து வந்த ராணுவ அதிகாரிகள் பீரங்கியை ஏற்றி வந்த கனரக லாரியின் ஒப்பந்தகாரர்களுடன் ஆலோசனை நடத்தினர். மேலும் அதிக திறனுள்ள பளு தூக்கி இயந்திரம் கொண்டு வரப்பட்டு அதன் உதவியுடன் லாரியை நகர்த்திச் செல்ல ராணுவத்தினர் முயற்சித்தனர்.

ஆனால் மலைப்பாதையில் லாரி சிக்கி போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் என்பதாலும், லாரியை அங்கிருந்து ஓட்டிச்செல்ல லாரி டிரைவர் மறுத்ததாலும் வேறு வாகனத்தில் மாற்றி இதனை எடுத்துச் செல்ல முடிவு செய்து உள்ளனர்.
இது குறித்து உயரதிகாரிகளிடம் ஆலோசனை நடத்திய பின் அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பீரங்கியை மலைப் பாதையில் எடுத்துச் செல்வதற்கு வசதியாக சிறிய லாரி ஏற்பாடு செய்ய உள்ளதாகவும் ராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags : Wellington Army Camp ,
× RELATED 3 மாதத்தில் மீண்டும் பாஜ ஆட்சி; உத்தவ்...