சுய உதவிக்குழுக்களுக்கு கடன் தருவதாக கூறி தனியார் நிதி நிறுவனம் ரூ.40 லட்சம் மோசடி

ஈரோடு,  அக். 21:   தனிநபர், சுய உதவிக்குழுக்களுக்கு கடன் தருவதாக கூறி தனியார் நிதி நிறுவனம் ரூ.40 லட்சம் மோசடி செய்து  விட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் ஈரோடு எஸ்பி. அலுவலகத்தில் புகார் அளித்தனர். ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்கள்  நேற்று ஈரோடு எஸ்பி. அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அப்போது, பாதிக்கப்பட்டவர்கள்  கூறியதாவது: பவானி காலிங்கராயன் பாளையத்தில் தனியார் நிதி  நிறுவனத்தின் கிளை கடந்த மாதம் துவங்கப்பட்டது. இந்த கிளையின் தலைமை  அலுவலகம் திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படுவதாக தெரிவித்தனர்.

அவர்கள் எங்களிடம் தனி  நபர், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை  1.5 சதவீத வட்டியில் கடன் தருவதாகவும், அதற்கு ஆவண (டாக்குமென்ட்) கட்டணம்  ரூ.1,250 ஆகும் என்றனர். மேலும், ரூ.1 லட்சம் கடன் பெற்றால் ரூ.5 ஆயிரம்,  ரூ.2 லட்சம் கடன் பெற்றால், ரூ.10 ஆயிரம் கமிஷனாக கொடுக்க வேண்டும் என  நிபந்தனை விதித்தனர். இதன்பேரில், தனி நபர் கடன் பெற ரூ.1,250ம், மகளிர்  சுய உதவிக்குழுக்கள் மூலம் 10 பேர், 15 பேர் என குழுவாக சேர்ந்து தனித்தனியாக  தலா ரூ.30 ஆயிரம் வரை டாக்குமென்ட் கட்டணமாக கொடுத்தோம்.

இந்நிலையில்,  நேற்று (நேற்று முன்தினம்) சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்திற்கு சென்றபோது,  அங்கு பணியாற்றும் ஊழியர்கள், நிறுவன நிர்வாகிகள் ஊரை விட்டு சென்று விட்டதாகவும்,  இதுவரை ஊழியர்களுக்கே சம்பள பாக்கி வைத்துள்ளதாகவும் தெரிவித்தனர். இந்நிறுவனம் பவானி மட்டும் அல்லாது மாவட்டத்தின் சுற்றுப்புற பகுதியில்  இருந்து இதுவரை ரூ.40 லட்சத்திற்கும் மேல் மோசடி செய்துள்ளது தெரியவந்தது.  எனவே, தலைமறைவாக உள்ள நபர்களை பிடித்து, அவர்கள் மீது உரிய நடவடிக்கை  எடுத்து, எங்களிடம் பெற்ற பணத்தை திரும்ப பெற்று தர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories:

>