டிச.1 முதல் அமலுக்கு வருகிறது புதிய ரயில்வே கால அட்டவணையில் குமரியில் ரயில் நிறுத்தங்கள் பல ரத்து பயணிகள் அதிர்ச்சி

நாகர்கோவில், அக்.20: குமரி மாவட்டத்தில் பயன்பாட்டில் இருந்து வருகின்ற பல்வேறு ரயில் நிறுத்தங்கள் புதிய ரயில்வே கால அட்டவணையில் ரத்து செய்யப்பட்டுள்ளது பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயில்களின் வேகத்தை அதிகரிக்கவும், ரயில்களின் புதிய நேரங்களுடன், ரயில்களின் பயண கட்டண வருவாய் குறைவாக உள்ள நிறுத்தங்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவிற்கு ரயில்வேயால் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது சில ரயில்கள் குறைவான பயணிகள் ஏறும் இறங்கும் இடங்களில் நிறுத்தப்படுகின்றன, இது பயண நேரத்தை அதிகரிக்கிறது, இதன் விளைவாக ரயில்கள் தாமதமாக அல்லது பயணநேரம் அதிகமாக இயக்கப்படுகின்றன. இதன் காரணமாக பயணிகள் குறைவாக பயன்படுத்தும் நிறுத்தங்கள் ரத்து செய்யப்படுகிறது. இந்த புதிய கால அட்டவணை டிசம்பர் 1 முதல் அமலுக்கு வர இருக்கிறது.

புனலூரிலிருந்து நாகர்கோவில் வழியாக மதுரைக்கு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிகளுடன் கூடிய தினசரி இரவு நேர பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயிலை எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்றம் செய்ய இதற்கு முன்பு அறிவிப்பு வெளியாகி முன்பதிவும் துவங்கியது. தற்போது புதிய கால அட்டணையின்படி 16729-16730 எண் கொண்ட எக்ஸ்பிரஸ் ரயிலாக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ள காரணத்தால் இந்த ரயிலின் கடம்பூர், நான்குநேரி, ஆரல்வாய்மொழி, பள்ளியாடி, குழித்துறை மேற்கு ஆகிய ரயில் நிலையங்களில் நிறுத்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் உள்ள கொல்லம் முதல் புனலூர் வரை உள்ள மக்கள் திருவனந்தபுரத்திற்கு தினசரி பல்வேறு அலுவல் பணிக்காக வந்து செல்வதற்கு வசதியாக ரயில் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த ரயில் புதிய கால அட்டவணையில் இனி கன்னியாகுமரி செல்லாமல் நாகர்கோவிலுடன் நிறுத்தப்படுகின்றது.

கன்னியாகுமரியிலிருந்து திருநெல்வேலிக்கு மாலை நேரத்தில் இயக்கப்பட்டு வரும் 56717 பயணிகள் ரயில் இனி நாகர்கோவில் - திருநெல்வேலி பயணிகள் ரயில் என இயங்கும். இந்த ரயிலும் கன்னியாகுமரி - திப்ரூகர் வாராந்திர ரயில் தினசரி ரயிலாக இயக்கப்பட்ட காரணத்தால் கன்னியாகுமரியில் ஏற்பட்டுள்ள இடநெருக்கடியால் இந்த ரயில் நாகர்கோவிலுடன் நிறுத்தப்படுகின்றது. நாகர்கோவிலிருந்து திருவனந்தபுரம் வழியாக கோட்டயத்துக்கு செல்ல பகல்நேர பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. திருவனந்தபுரத்திலிருந்து இயக்கப்பட்ட வந்த இந்த ரயில் 2007ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் நாகர்கோவில் வரை நீட்டிப்பு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த ரயில் 232 கி.மீ தூரத்தை பயணிக்க 7 மணி 45 நிமிடங்கள் எடுத்து கொண்டு மணிக்கு 30 கி.மீ வேகத்தில் பயணம் செய்கின்றது. இந்த ரயில் வருகின்ற கால அட்டவணையில் எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்றம் செய்து புதிய ரயில் எண் ஆக 16309 என அறிவிக்கப்பட்டுள்ளது.

 இவ்வாறு எக்ஸ்பிரஸ் ரயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டு பயணநேரம் 15 நிமிடம் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ரயில் நாகர்கோவில் டவுண், வீராணி ஆளுர், பள்ளியாடி, குழித்துறை மேற்கு, தனுவச்சபுரம், அமரவிளை, பாலராமபுரம், நேமம், ஆகிய ரயில் நிலையங்களில் இனி நிற்காது. இந்த ரயில் மறுமார்க்கம் கோட்டயம் - நாகர்கோவில் என இயக்கப்படுவது இல்லை. மேலும் நாகர்கோவிலிருந்து மதுரை, ஈரோடு வழியாக கோவைக்கு பகல் நேரத்தில் இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயில் எக்ஸ்பிரஸ் ரயிலாக அறிவிக்கப்பட்டு புதிய ரயில் எண் 16321-16322 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் நாகர்கோவிலிருந்து கோவை மார்க்கம் பயணம் செய்யும் போது வேகம் அதிகரிக்கப்பட்டு பயணநேரம் 55 நிமிடம் குறைக்கப்பட்டுள்ளது. இதைப்போல் மறு மார்க்கம் வெறும் 5 நிமிடங்கள் குறைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் தோவாளை, ஆரல்வாய்மொழி, காவல்கிணறு, பணக்குடி, செங்குளம், மேலப்பாளையம் ஆகிய ரயில் நிறுத்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் சென்னை எழும்பூர் - குருவாயூர் ரயில் 16127-16128 ஆரல்வாய்மொழியிலும், நாகர்கோவில் - மங்களுர் 16649-16650 ரயில் டிவைன்நகரிலும், சென்னை எழும்பூர் - கொல்லம் அனந்தபுரி 16723-16724  பணக்குடியிலும், கன்னியாகுமரி - ராமேஸ்வரம் ரயில் 22621-22622 நாங்குநேரியிலும் நிறுத்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். இவ்வாறு குமரி மாவட்டத்தில் பயன்பாட்டில் இருந்து வந்த பல்வேறு நிறுத்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது பயணிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Related Stories:

>